தில்லி: மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் விரைவில் திறப்பு? உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
புதுதில்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படுவதால், மாணவர்களின் உடல்நலனைக் கருத்திற்கொண்டு, 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கடந்த வாரம் தில்லி முதல்வர் அதிஷி உத்தரவிட்டார்.
தில்லியில் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மேற்கண்ட அறிவிப்பு கடந்த 18-ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து, தில்லி மற்றும் அதனையொட்டிய தேசியத் தலைநகர் பகுதி(என்சிஆர்) பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லாமல் இணைய வழியில் கல்வி பயில அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள் பலர் பள்ளிகளுக்குச் செல்ல முடியாததால் மதிய உணவு கிடைப்பது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. பலருக்கு இணைய வழியில் கல்வி பயில ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட சாதனங்கள் வாங்க வசதி வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பல குடும்பங்களில் காற்றை சுத்திகரிக்கும் ஏர் ஃப்யூரிஃபையர் போன்ற சாதனங்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் வாழ்கின்றனர்.
அப்படியிருக்கையில், மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கல்வி பயில்வதற்கும், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று வகுப்புகளை தொடருவதற்கும், காற்று மாசுபாட்டால் எவ்வித வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு, பள்ளிகளில் 10 , 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பகளை தொடங்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து நாளைக்குள் (நவ. 26) முடிவெடுக்க காற்றின் தர மேலாண்மை ஆணையத்தை(சிஏக்யூஎம்) அறிவுறுத்தியுள்ளது.