ரூ.1.10 கோடிக்கு ஏலம் போன 13 வயது வீரர்!
13 வயதான வைபவ் சூரியவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. இரண்டு நாள்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்து, ஐபிஎல் தொடரில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். ரூ.30 லட்சம் அடிப்படை விலை கொண்ட இவரை ரூ.1.10 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
வைபவ் சூரியவன்ஷி தனது 12-வது வயதில் பிகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடி 5 போட்டிகளில் சுமார் 400 ரன்களைக் குவித்தார்.
19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி வீரரான சூரியவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிராக 41 ரன்கள் அடித்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிராக டக் அவுட் ஆனார்.
ரஞ்சி டிராபியில் பிகார் அணிக்காக தனது முதல் தரப்போட்டியில் அறிமுகமானார். அவர் அறிமுகமான போது அவருக்கு வயது 12 ஆண்டுகள் 284 நாள்கள். வைபவ் சூரியவன்ஷி, 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான மிகவும் இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பிகாருக்காக ரஞ்சி டிராபியில் விளையாடிய இரண்டாவது இளைய வயதுடையவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள 19 வயதுக்குள்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8-வது படிக்கும் வரும் சூரியவன்ஷியை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.