விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்தைக் கண்டித்து பாமகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பேருந்து நிழற்குடையிலிருந்து பாமக எம் எல்ஏ ச.சிவக்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் தங்க ஜோதி, மாவட்டச் செயலர்கள் பாலசக்தி, ஜெயராஜ், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்தபோது, பாமகவினர் போலீஸ் வேனிலிருந்து இறங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் விழுப்புரத்துக்கு 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், வன்னியர் களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேட்டியளித்த பாமக மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.