ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்! ரூ.3.8 கோடி மோசடி! மக்களே எச்சரிக்கை!!
மும்பை: டிஜிட்டல் கைது என்று கூறி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவது குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 77 வயது பெண்மணியை ஏமாற்றி, ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைத்து ரூ.3.8 கோடி மோசடி செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மோசடியாளர்கள், தங்களை சட்டத் துறை அதிகாரிகள் போல காட்டிக்கொண்டு, போலியாக பண மோசடி வழக்குத் தொடர்ந்துவிடுவோம் என்று மிரட்டி, ஒரு மாத காலத்துக்கும் மேல், அப்பெண்மணியை டிஜிட்டல் காவலில் வைத்திருந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
புகார் கொடுத்திருப்பவர், மும்பைச் சேர்ந்தவர். தனது ஓய்வுபெற்ற 75 வயது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.
இது குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் புகாரில், அப்பெண்மணிக்கு வாட்ஸ்ஆப் காலில் அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசியவர்கள் சட்டத் துறை அதிகாரிகள் போலவும், அப்பெண்மணி பெயரில் தைவானுக்குச் சென்ற பார்சல் ஒன்று பிடிபட்டிருப்பதாகவும் அதில் 5 பாஸ்போர்ட்டுகள், வங்கிக் கணக்குப் புத்தகம், 4 கிலோ துணிகள், போதைப் பொருள்கள் இருந்ததாகவும் அவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அது போன்ற எந்த பார்சலையும் தான் அனுப்பவில்லை என்று பெண்மணி கூறியிருக்கிறார். ஆனால், உங்களது ஆதார் எண்தான் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, மும்பை காவலரிடம் பேசுங்கள் என்று வேறொருவருக்கு அழைப்பை மாற்றியிருக்கிறார். அப்பெண்மணியும் தன்னிடம் பேசுபவர் காவலர் என்று நினைத்திருக்கிறார்.
அப்பெண்மணியை ஸ்கைப் ஆப் பதிவிறக்கம் செய்யுமாறு அதிகாரி என்ற மோடியாளர் கூறியிருக்கிறார். ஆனந்த் ராணா ஐபிஎஸ் அதிகாரி என அடையாளம் கூறிக்கொண்ட மோசடியாளர், ஸ்கைப் மூலம் பேசியிருக்கிறார். இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது, ஸ்கைப்பை ஆஃப் செய்யக்கூடாது என்றிருக்கிறார்.
பிறகு, அப்பெண்மணியின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டிருக்கிறார்கள். பிறகு பிரான்ஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு மற்றொருவரும் அழைப்பில் பேசி, தாங்கள் சொல்லும் தொகையை சொல்லும் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும், அப்போதுதான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என்றிருக்கிறார். அவர் குற்றவாளி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால், உடனடியாக பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அவரும் அவர்கள் சொன்னபடி தொகையை அனுப்பியிருக்கிறார். பிறகு, அப்பெண்மணிக்கு மும்பை காவல்துறை லோகோவுடன் கூடிய போலி கைது உத்தரவையும் அனுப்பியிருக்கிறார்கள்.
24 மணி நேரமும் வாட்ஸ்ஆப் அழைப்பில் இணைந்திருக்க வேண்டும் என்று பெண்மணியை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
பிறகு, நேரடியாக வங்கிக்குச் சென்று பணப்பரிமாற்றம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். வங்கியிலிருந்து காரணம் கேட்டால், சொத்து வாங்க என்று சொல்லுமாறும் மோசடியாளர்களே அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவரும் ரூ.15 லட்சத்தை மோசடியாளர்களுக்கு அனுப்பியிருக்கிறார். ஒரு சில நாள்கள் கழித்து விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறி, இந்தத் தொகையை மோசடியாளர்கள் அப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கே திருப்பியனுப்பியிருக்கிறார்கள். இதனால், அப்பெண்மணிக்கு மோசடியாளர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அப்பெண்ணின் வங்கிக் கணக்கு மற்றும் கணவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.3.8 கோடியை ஆறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.
பிறகு பணம் திரும்ப வராததால், பெண்மணிக்கு சந்தேகம் வந்து மோசடியாளர்களைக் கேட்டதற்கு, பணத்தை திரும்ப அனுப்ப குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்று கூறியதால் அவர் இது குறித்து தனது மகளிடம் கூறியிருக்கிறார். உடனடியாக அவர் 1930 என்ற சைபர் செல் உதவி எண்ணை தொடர்புகொண்டு பேசி விவரத்தைக் கூறியிருக்கிறார்.
அப்போதுதான், இது மோசடி என்பதே அப்பெண்மணிக்குத் தெரிய வந்தது. உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினர் ஆறு வங்கிக் கணக்குகளையும் முடக்கி, மோசடியாளர்களை தேடி வருகிறார்கள்.