அமித் ஷா, மோடியின் அடிமைகள் ஷிண்டே, அஜித் பவார்! சஞ்சய் ரெளத்
ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகளாக உள்ளதாக சிவசேனை(உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா செய்துள்ள நிலையில், புதிய முதல்வரின் பெயரை இதுவரை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறிவிக்காமல் உள்ளது.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 132, சிவசேனை 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியின் தலைவரே முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வர் பதவியை ஷிண்டே இன்று காலை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய சஞ்சய் ரெளத்,
“முதல்வர் யார் என்பதை அமித் ஷாவும் மோடியும் தான் முடிவெடுப்பார்கள். ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் அவர்களின் கட்சிக்காக தனித்து முடிவெடுக்க முடியாது.
இரண்டு கட்சிகளும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகள், பாஜகவின் துணை நிறுவனங்கள்.
பாஜகவுக்குதான் தற்போது பெரும்பான்மை உள்ளது. தனித்து ஆட்சி அமைக்க ஷிண்டே மற்றும் அஜித் பவாரின் கட்சியைக் கூட அவர்கள் உடைப்பார்கள். என்னை பொறுத்தவரை தேவேந்திர ஃபட்னவீஸ்தான் அடுத்த முதல்வர் ஆவார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : தயவு செய்து... ஏக்நாத் ஷிண்டே வைத்த கோரிக்கை! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களிலும் காங்கிரஸ் அங்கம் வகித்த மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.
பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான 29 இடங்கள்கூட எந்த எதிர்க்கட்சியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.