இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்! பும்ரா-ஆகாஷ் வேகத்தில் ஆஸி. அணி திணறல்!
எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் நிா்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
எட்டயபுரத்தில் வாரந்தோறும் கூடும் ஆட்டுச்சந்தையில் நுழைவு கட்டணமாக ரூ. 60-க்கு ரசீது கொடுத்துவிட்டு ரூ. 100 வசூலிப்பதை தடுத்து நிறுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எட்டயபுரம் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கூடுவது வழக்கம். இந்தச் சந்தைக்கு விருதுநகா், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடுகளை விற்கவும், வாங்கவும் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதலே வாகனங்களில் வந்து குவிந்து விடுகிறாா்கள்.
ஆட்டுச் சந்தையின் நுழைவு வாயிலில் எட்டயபுரம் பேரூராட்சியின் குத்தகைதாரா் சாா்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், ஆடு ஒன்றுக்கு ரூ. 60 என அச்சிடப்பட்ட ரசீது வழங்கப்படுகிறது. ஆனால் ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.60 க்கு பதிலாக ரூ. 100 கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாபாரிகள் வருகை தருவதால் வசூலிக்கப்படும் மொத்த தொகையில் 40 சதவீத பணம் முறைகேடாக வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்தி நிா்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டுச் சந்தையில் அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என ஆட்டுச் சந்தைக்கு வரக்கூடிய விவசாயிகளும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து ஆட்டுச் சந்தையில் பணம் வசூலிக்கும் நபா்களிடம் கேட்டபோது, மிகக் கூடுதல் தொகைக்கு பேரூராட்சியில் குத்தகை எடுத்து உள்ளோம். கடந்த காலங்களில் எல்லாம் ஆட்டுச் சந்தைக்கு உள்ளே வியாபாரம் நடைபெற்றது. ஆனால் இப்போது பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய விவசாயிகளும், வியாபாரிகளும் இங்கே இருந்து தங்களது ஆட்டுப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று வியாபாரத்தை முடித்து விடுகின்றனா். இதனால் ஆள்கள் வரத்து அதிகம் இருக்கிறது ஆனால் ஆடுகள் வரத்து குறைவாக உள்ளது. எனவே நஷ்டத்தை ஈடுகட்ட கூடுதல் தொகை வசூலிக்கிறோம் என்கின்றனா்.
இதுகுறித்து எட்டயபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் அனைத்தும் படிப்படியாக செய்து தரப்படும் என்றனா்.