பாஜகவால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை! எப்படி மசோதாவை நிறைவேற்றுவார்கள்? காங...
1 மணி நேரம் முதியவரை நிற்க வைத்த அரசு ஊழியர்களுக்கு... அதிரடி பாடம் எடுத்த அதிகாரி..! என்ன நடந்தது?
வங்கிகள், ரயில் நிலையங்களில் முதியவர்கள் வரிசையில் நின்றால் அவர்களுக்கு இளையவர்கள் முன் வரிசையில் செல்லும்படி இடம் கொடுப்பது வழக்கம். ஆனால், டெல்லி அருகில் இருக்கும் நொய்டா குடியிருப்பு வீட்டு வசதித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் எப்போதும் முதியவர்களை நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று பலரும் வேதனைப்பட்டனர்.
இந்நிலையில், நொய்டா குடியிருப்பு வீட்டு வசதித்துறை அரசு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோகேஷ், அலுவலகத்தில் முதியவர் ஒருவர் வரிசையில் காத்து நின்று கொண்டிருப்பதை தனது அறையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்தார்.
உடனே அந்த கவுண்டருக்கு சென்று, அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரியிடம் அந்த முதியவரது வேலையை உடனே செய்து கொடுக்கும்படியும், இது போன்று நீண்ட நேரம் நிற்க வைக்கவேண்டாம் என்றும் லோகேஷ் கேட்டுக்கொண்டார்.
20 நிமிடம் கழித்து லோகேஷ் கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, அவர் சொன்ன அதே கவுண்டரில் அந்த முதியவர் தொடர்ந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த பெண் ஊழியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். சரியான பதில் இல்லை.
இதனால், அனைத்து ஊழியர்களையும் 20 நிமிடம் எழுந்து நின்று வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.
பணியில் இருந்த ஊழியர்கள் 20 நிமிடம் நின்று கொண்டே வேலை செய்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியது.
பள்ளியில் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரி தண்டனை கொடுத்திருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
`அரசு அதிகாரிகள் சரியான முறையில் பணியாற்ற இது போன்ற தண்டனை அவசியம் தேவை' என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் லோகேஷ் கூறுகையில், "வரிசையில் நின்ற முதியவருக்கு சொத்து பிரச்னை தொடர்பாக பதிலளிக்காமல் அரசு ஊழியர் முதியவரை வரிசையில் காக்க வைத்தார். இதனை, நான் கண்காணிப்பு கேமராவில் பார்த்து தெரிந்து கொண்டு அவரிடம் சென்று வேலையை விரைந்து முடித்துக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். முதியவர் ஒரு மணி நேரமாக வரிசையில் நின்று கொண்டிருந்தார். எனவே அனைத்து ஊழியர்களும் 20 நிமிடம் எழுந்து நின்று கொண்டே வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டேன்'' என்றார். மொத்தம் 16 ஊழியர்கள் இத்தண்டனைக்கு உள்ளானார்கள்.