நாமக்கல்: `பணம் பெருகும்' -யூடியூபில் ஜோதிடர் கூறியதை கேட்டு கோயிலில் குவிந்த மக்கள்..!
நாமக்கல், கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மார்கழி மாத முதல் நாளையொட்டி நேற்று அதிகாலை சுவாமியை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது தற்போது ராகு- கேது பெயர்ச்சி நடக்க உள்ளதால், நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து ஓம் ஸ்ரீ ஓம் என்ற மந்திரத்தை 45 நிமிடம் ஜெபித்தால் அபரிமிதமான பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். உங்களைத் தேடி பணம் கொட்டும் என ஜோதிடர் ஒருவர் யூடியூப் சேனலில் கூறியிருந்ததும், அதை நம்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நேரத்திலேயே கோயில் வளாகத்தில் திரண்டதும் தெரியவந்தது.
அதேசமயம் இதுகுறித்து கோயில் நிர்வாகத்திற்கும் முன்கூட்டியே யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறிது நேரத்தில் அந்த ஜோதிடர் தலைமையில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து காலை 6.35 மணி முதல் 7.25 மணி வரை மந்திரத்தை கூறி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்து கொண்ட பொதுமக்கள் வந்த வாகனங்களை கோட்டை ரோட்டின் இருபுறமும் நிறுத்தி இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து போலீஸார் பஸ்களை வேறு வழியில் திருப்பி விட்டனர். இதனால் நாமக்கல் நகரில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.