மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!
One Nation One Election: ``சர்வாதிகாரத்தை நோக்கியப் பயணம்.." - எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை இன்று மக்களவையில் அறிமுகம் செய்திருக்கிறது. சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்தியா கூட்டணியின் சிவசேனா (UBT), ஆம் ஆத்மி , காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி வருகின்றன.
அதே நேரத்தில் NDA கூட்டணி எம்.பி.க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்புமாறு வலியுறுத்துகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கட்சி உறுதியான ஆதரவை தெரிவித்திருக்கிறது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி தர்மேந்திர யாதவ், `ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ``இந்த மசோதா சர்வாதிகாரத்தை நோக்கியப் பயணம். நாட்டில் `சர்வாதிகாரத்தை’ கொண்டு வர பா.ஜ.க முயற்சிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறர். காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, “இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்துவதும், பரிசீலிப்பது இந்த அவையின் சட்டமன்றத் திறனுக்கு அப்பாற்பட்டது. இதை திரும்பப் பெற அரசை வலியுறுத்துகிறேன்” என்றார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்.பி அசாதுதீன் ஓவைசி, ``இந்த மசோதா நாட்டில் உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளையும் தனித்தனியாக இல்லாமல் ஆக்கிவிடும். பிரதமரின் ஈகோவை திருப்திப்படுத்த மட்டுமே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்தப் பேட்டியில், ``ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா என்பது முதல் மைல்கல் மட்டுமே. புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே உண்மையான நோக்கமாகும். புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடியின் உண்மையான நோக்கம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ் வரலாற்று ரீதியாக எதிர்த்துள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.