`பாடநூல் கழகத்தில் முதலீடு' - போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் குறித்து அண்ணாமலை பகீர்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், தி.மு.க நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாபர் சாதிக்கின் நிறுவனமான ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான ‘ஸ்ரீ அப்பு டைரக்ட்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 -2023 காலகட்டத்தில், தனது ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத் துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.
இதே காலகட்டத்தில்தான், ‘ஸ்ரீ அப்பு டைரக்ட்’ நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாபர் சாதிக்கின் ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ நிறுவனம் ஆகும். குறிப்பிட்ட காலகட்டத்தில், தி.மு.க நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "இதைவிட கேலிக்கூத்தான விஷயம் இருக்க முடியாது. தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு என தனியாக இயக்குனர் இருக்கிறார். அவர்கள்தான் பாடநூல் கழகத்துக்கு தேவையான புத்தகம் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு டெண்டர் வெளியிடுவார்கள். அதில் விருப்பம் கொண்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும். பிறகு சரியான நிறுவனத்தை தேர்வு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். அப்படி தொழில் செய்வோர் கலந்து கொள்வார்கள். இதில் திமுகவுக்கு என்ன தொடர்பு இருக்கிறது. லண்டன் சென்று திரும்பிய பிறகாவது திருந்துவார் என நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தனது பெயர் லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாம் அண்ணாமலை பேசி வருகிறார்" என்றார்.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்தியிடம் விளக்கம் கேட்டோம், "தலைவர் உண்மை இல்லாமல் பேச மாட்டார். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் தி.மு.க வெள்ளயறிக்கை வெளியிட வேண்டியதுதானே?. அவர்கள் உடனே தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நடத்த ஒப்பந்தங்கள் தொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிட வேண்டும். வெறுமென இல்லை, இல்லை என சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம். தி.மு.கவினர் சொல்லும் பொய்களை நம்புவதற்கு மக்களும் தயாராக இல்லை" என்றார்.