Iran Hijab: ``சட்டத்தில் திருத்தம் வேண்டும், அதனால்.." - ஹிஜாப் விவகாரத்தில் பின்வாங்கிய இரான்!
இரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில், hijab and chastity law எனும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, பெண்கள் தங்கள் கைகள், கால்கள், முகத்தைத் தவிர உடல் முழுவதும் முழுமையாக மறைக்க வேண்டும் என அந்த சட்டம் வலியுறுத்தியது. இதைத் தவறும் பெண்களுக்கு அபராதம், அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், நாட்டு மக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக் கிழமை ஹிஜாப் தொடர்பான சட்டம் அமலுக்கு வருவதை இரான் அரசு திடீரென நிறுத்தியுள்ளது.
இரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், தனது தேர்தல் பிரசாரத்தின் போது `பெண்கள் மீது அரசு சுமத்திவரும் கட்டுப்பாடுகளை எதிர்த்து, தனிநபர் சுதந்திரங்களை மதிப்பேன்' என வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், இந்த சட்டம் தொடர்பாக, இரான் அதிபருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், ``இந்த சட்டம் தெளிவற்ற முறையில் இருக்கிறது. இதில் திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே, அதன் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டிருக்கிறது" என இரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் குறிப்பிட்டிருக்கிறார்.