மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!
தூத்துக்குடி: கொட்டித் தீர்த்த கனமழை... தெருக்களில் மழைநீர் வடியாததால் அவதிப்படும் மக்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் குளம் போலத் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் பல சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்தன. பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் இன்னும் வடியவில்லை. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்களில் இன்னமுக் மக்கள் வெளியே வர முடியாமலும், இடுப்பளவு தண்ணீரில் சிரமப்பட்டும் வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
தாழ்வான பகுதியான மில்லர்புரம், ராஜகோபால் நகர், கதிர்வேல்நகர், பி.என்.டி காலனி, ராஜீவ்நகர், அம்பேத்கர் நகர், ஆதிபராசக்தி நகர், திரு.வி.க நகர், பால்பாண்டி நகர் ஆகிய பகுதிகளில் இன்னமும் மழை வெள்ள நீர் வடியவில்லை. மில்லர்புரத்தில் உள்ள பி.எம்.சி மேல்நிலைப்பள்ளியைச் சுற்றிலும் மழை நீர் சுமார் 3 அடி உயரத்தில் தேங்கி நிற்பதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் வெள்ள நீரில் நனைந்தபடியே பள்ளிக்குச் செல்கிறார்கள். வெள்ள நீர் வடியும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம், “இந்த பகுதியில் 3 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மழையின் போதும் மழை நீர் குளம் போலத் தேங்கிவிடும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லை. மழை பெய்து 5 நாட்கள் ஆகியும் இன்னமும் மழை நீர் வடியவில்லை. மழை நீரை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை நீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால் மாணவர்களுக்கு தோல் நோய்கள், தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பேசினோம், “மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான சில பகுதிகளில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீர் உறிஞ்சப்பட்டு லாரிகள் மூலம் கடலில் கலக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கண்காணிப்பதற்காக மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மில்லர்புரத்திலுள்ள அந்த தனியார் பள்ளி பகுதி தாழ்வான மற்றும் நீர்ப்பிடிப்பு நிறைந்த பகுதி அதனால் மழைநீர் வடியவில்லை. இருப்பினும் மோட்டார்கள் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளோம். விரைவில் மழைநீர் அப்புறப்படுத்தப்படும்” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...