திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம்: அரசாணை வெளியீடு
திருச்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதை அடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 27 இல் சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் கீழ் காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக கலைஞர் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் அரசாணை மூலம் வழங்கியுள்ளார்.
இதையும் படிக்க |அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரம் கிராம நகரளவையில் 1,97,337 சதுரடி அளவில் நூலகக் கட்டடம், மின் பணிகள் ரூ.235 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டுவதற்கு பொதுப்பணித் துறையிடம் இருந்து விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் வரைப்படம் பெறப்பட்டுள்ளது.
மேலும் நூலகத்திற்கு தேவையான நூல்கள் மற்றும் மின்நூல்கள் ரூ.50 கோடி மதிப்பிலும் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.290 கோடி மதிப்பில் அமைப்பதற்கு தமிழ்நாடு நிதிக் குறியீடு விதி 99 இன்படி முன்பணம் பெற்று செலவினம் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.