BB Tamil 8: 'இந்த மாதிரி என்கிட்ட 'Attitude' காட்டாதிங்க செளந்தர்யா...'- கொதித்த...
திருப்பூர் மாநகராட்சியைக் கண்டித்து 90 சதவீத கடைகள் அடைப்பு!
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை உயர்த்தியுள்ளதைக் கண்டித்து வியாபாரிகள், தொழில் அமைப்புகள் சார்பில் 90 சதவீத கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.
திருப்பூர் மாநகராட்சியில் தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடைக் கட்டணம் ஆகியவற்றை கடுமையாக உயர்த்தியுள்ளது. மேலும், குறித்த காலத்துக்குள் வரிகளை செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராத வட்டி, ஆண்டுக்கு 6 சதவீதம் வரியை உயர்த்துவதாகவும் அறிவித்தது. மேலும், வாடைக்கட்டடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியையும் மத்திய அரசு விதித்துள்ளது. இந்த வரி உயர்வுகளுக்கு வியாபாரிகள் சங்கங்கள், தொழில் அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
அதே போல, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாஜக, கொ.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மாநகராட்சி வரி உயர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், திருப்பூரில் வியாபாரிகள் சங்கங்கள், தொழில் அமைப்புகள் சார்பில் புதன்கிழமை முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி திருப்பூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பல்லடம் சாலை, மங்கலம் சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், பின்னலாடை மற்றும் அதனைச்சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பாலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம், குண்டடம், ஊத்துக்குளி, காங்கயம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.