ரன் குவிப்பின் மந்திரம் என்ன? கே.எல்.ராகுல் பேட்டி!
பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து வெற்றிகரமாக 252/9 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமான கே.எல்.ராகுல் பேட்டிங்கின் தான் செய்தது என்னவென்று பேட்டியளித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. 445க்கு ஆல் அவுட்டாக இந்திய அணி 4ஆம் நாள் முடிவில் 252/9 ரன்கள் எடுத்துள்ளது.
கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 139 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். 2024-2025 சீசனில் இந்தியாவின் பேட்டர்களில் முதல் இன்னிங்ஸில் அதிகமான சராசரியாக 38.50 உடன் கே.எல்.ராகுல் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கே.எல்.ராகுல் கூறியதாவது:
முதல் 20-30 பந்துகள் முக்கியம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டம் இருக்கும். தொடக்க வீரராக இருக்கும்போது உங்களுக்கு சிறிது அதிர்ஷடமும் தேவை.
ஆஸ்திரேலியாவில் கொக்காபுரா பந்தில் வேகமும் பௌன்சர்களும் அதிகமாக இருக்கும். முதல் 10-15 ஓவர்களை கடந்துவிட்டால்போதும் பிறகு நமக்கு ஒரு தன்னம்பிக்கை வரும்.
அனைவருக்கும் முதல் 20-30 பந்துகள் முக்கியமானது. அனைவரும் சிறப்பாக செயல்படவே முயற்சிக்கிறார்கள். இது நீண்ட தொடர். இப்போது 3 டெஸ்ட்டில் 5 இன்னிங்ஸ் முடித்துள்ளோம். எனவே ஒவ்வொருவரும் அவரவர் திட்டங்களுடன் வருவார்கள்.
வெற்றியின் மந்திரம் இதுதான்
முதல் 30 ஓவர்களில் வலுவான டிஃபென்ஸ் மூலம் பந்துவீச்சாளர்களுக்கு மரியாதை தரவேண்டும். தேவையில்லாத பந்துகளை விடவேண்டும். பந்து பழையதான பிறகு ரன்கள் குவிக்க முடியும். அதுதான் என்னுடைய திட்டம்.
தொடக்க வீரர் யாராக இருந்தாலும் ஆஃப் சைடு பந்துகளை விடுவது முக்கியமானது. அடிலெய்டில் மெக்ஸ்வீனி, லபுஷேன் அந்த இரவில் 10-15 ஓவர்கள் குட் லென்ந்தில் விழும் பந்துகளை அடிக்காமல் விட்டார்கள்.
சரியான இடங்களில் அடித்தால் வெளிநாடுகளில் ரன்கள் குவிக்க முடியும். பெர்த், பிரிஸ்பேன் இரண்டும் ஒரேமாதிரியான ஆடுகளங்கள். பௌன்சர்களுக்கு சாதகமானவை.
ஆஃப் சைடு பந்துகளை விடுதல், எனது உடலுக்கு நெருக்கமாக பேட்டினை வைத்து விளையாடினேன். அடிப்படையை சரியாக செய்தேன். அதுதான் எனது மந்திரம். அதைத் தவிர வேறெதும் புதியதாக நான் செய்யவில்லை என்றார்.