கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு: கொமுக தலைவா் பெஸ்ட் ராமசாமி
பொது, தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண் இயக்குநர்கள்!
நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண்கள், நிர்வாக இயக்குநர்களாகப் பணிபுரிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெண்கள் மேம்பாட்டின் ஒருபகுதியாக பல்வேறு தளங்களில் முக்கியமான முடிவெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.
இது குறித்து பெருநிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''நிறுவனங்கள் சட்டம் 2013-ன் மூலம் பெரு நிறுவனங்களில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க பெருநிறுவன விவகாரங்கள் துறை ஊக்குவிக்கிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் வரும் நிறுவனங்கள் தலைமை இயக்குநர்களில் அவசியம் ஒரு பெண் இடம்பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
மூலதனமாக ரூ. 100 கோடி செலுத்திய அல்லது ஆண்டுக்கு ரூ. 300 கோடி வருவாய் ஈட்டும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டியது கட்டாயம்.
இதனைச் செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 172-ன் படி அபராதம் விதிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் மட்டும் (நவ. 30 வரை) பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 1,12,962-ஆக உள்ளது.
இதன் விளைவாக தற்போது பல தனியார் நிறுவனங்களில் 11,11,040 பெண் இயக்குநர்கள் உள்ளனர். பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களில் 46,939 பெண்கள் தலைமை இயக்குநர்களாக உள்ளனர். பொதுத் துறை நிறுவனங்களில் 8,672 பெண்கள் இயக்குநர்களாக உள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | நகர்ப்புறத்தில் 9.38 லட்சம் மக்களுக்கு வீடு இல்லை: மத்திய அரசு