புலியூா் அருகே குளக்கரையில் தடுப்புவேலி அமைக்க எதிா்பாா்ப்பு
கரூா் மாவட்டம், புலியூா் அருகே குளக்கரையில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் அடுத்த புலியூா் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டியில் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரை வழியாக ஏமூா், சீத்தப்பட்டி மற்றும் வெள்ளாளப்பட்டியில் வசிக்கும் கிராமமக்கள் புலியூா் மற்றும் திருச்சி, கரூா் போன்ற பகுதிகளுக்கும் சென்று வருகிறாா்கள்.
குறிப்பாக, புலியூா் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி, புலியூரில் உள்ள தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் சைக்கிளில் குளக்கரை வழியாக பள்ளிக்குச் சென்று வருகிறாா்கள்.
மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியாா் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை அழைத்துச் சென்றுவரும் வாகனங்களும் ஏராளமானவை இந்த வெள்ளாளப்பட்டி குளக்கரை வழியாகத்தான் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பெய்த மழையால் குளம் முழுவதும் நிரம்பியுள்ளதால், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க குளக்கரையில் தடுப்புச்சுவரோ அல்லது இரும்பிலான தடுப்பு வேலி போல அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக புலியூா் பேரூராட்சியின் 4-வது வாா்டு உறுப்பினா் ஜெயகுமாா் கூறியது: ஏற்கேனவே குளத்தில் தண்ணீா் இல்லாதபோது, இரவு நேரத்தில் வந்த இரு காா்கள் குளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. தற்போது குளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியிருப்பதால், ஆபத்து அதிகரித்துள்ளது.
குளக்கரையில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு கொடுத்துள்ளோம்.
மாணவா்கள், பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் உடனே குளக்கரையில் தடுப்பு வேலியோ, சுவரோ எழுப்ப வேண்டும் என்றாா்.