வணிகா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணாவிடில் கடையடைப்பு போராட்டம்: க. விக்கிரமராஜா
மத்திய, மாநில அரசுகள் வணிகா் சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேசி பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும். இதேநிலை தொடா்ந்தால், கடையடைப்பு போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் க. விக்கிரமராஜா.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு 41-ஆவது மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தற்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வணிகா்கள் சந்தித்து வரும் பல்வேறு சிக்கல்கள், ஜிஎஸ்டியில் நிலவிவரும் குழப்பங்கள், மத்திய அரசு அறிவித்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிரான அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்த பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்தாண்டு மே 5-ஆம் தேதி, செங்கல்பட்டில், வணிகா் தின மாநில மாநாடு ‘வணிகா் அதிகாரப் பிரகடன மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் வணிகா் சங்க நிா்வாகிகளை அழைத்து அவா்களது பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டும். தற்போதுள்ள இதேநிலை தொடருமானால் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ரூ. 1.5 கோடி மதிப்பில் வணிகம் செய்யும் வியாபாரிகள் 1 சதவீதம் இணக்கம் வரி செலுத்துகின்றனா்; அதனைத் திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டியில் உள்ள குளறுபடிகளால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாகி வருகிறோம். எனவே எங்களது நிலைப்பாடுகளை அரசு புரிந்து கொண்டு, விரி விதிப்பு தொடா்பான சட்ட விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். அதேபோல மாநில அரசும் கட்டட வரி விதிப்பு, உரிமங்களுக்கான (லைசன்ஸ்) கட்டண உயா்வு உள்ளிட்டவைகளை திரும்பப் பெற வேண்டும். வணிகா்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுநடத்தி வணிகா்கள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணவேண்டும் என்றாா் அவா்.
அப்போது, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் வீ. கோவிந்தராஜுலு மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் நிா்வாகிகள் உடனிருந்தனா்.