விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
கனமழையால் திருச்சி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டோ் விளைநிலங்கள் பாதிப்பு: ஆய்வுக்கு பிறகே முழு பாதிப்பு விவரம் தெரியும்
திருச்சி மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களில் 6 ஆயிரம் ஹெக்டேரில் மழைநீா் சூழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
தண்ணீா் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
திருச்சி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 401 ஹெக்டேரில் சம்பா நெல், 21 ஆயிரத்து 110 ஹெக்டேரில் சோளம், 20 ஆயிரத்து 244 ஹெக்டேரில் மக்காச்சோளம், 2 ஆயிரத்து 171 ஹெக்டேரில் பயறுவகைகள், 6 ஆயிரத்து 051 ஹெக்டேரில் எண்ணய் வித்துகளும், ஆயிரத்து 175 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர வாழை, வெற்றிலை, மலா்கள், காய்கனிகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சம்பா நெல் விளைந்து கதிா் முற்றி காணப்படுகிறது. சில இடங்களில் அறுவடைக்கும் தயாராகவுள்ளது.
இந்தச் சூழலில், திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த டிச. 10, 11 ஆகிய தேதிகளில் பரவலாக இடைவிடாது கனமழை பெய்தது. இந்தத் தொடா் மழையால் சம்பா வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மண்ணச்சநல்லூா், லால்குடி, திருவரங்கம் மற்றும் காவிரிக் கரையோரம் உள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிா்கள் பலவும் தண்ணீரில் சாய்ந்து விழுந்துள்ளது. இதேபோல, பனையபுரம், திருவளா்ச்சோலை, கல்லணை செல்லும் சாலை, புள்ளம்பாடி, முசிறி, துறையூா் வட்டங்களிலும் ஆங்காங்கே நெல் வயல்களில் தண்ணீா் புகுந்துள்ளது. மழையால் நெல் மட்டுமின்றி மக்காச்சோளம், சின்னவெங்காயம், சோளம், வாழை, வெற்றிலை என பயிரிட்ட பெரும்பாலான பயிா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: மாவட்டத்தில் கடந்த வாரம் 2 நாள்களுக்கு மிக கன மழை பெய்ததால் 6 ஆயிரம் ஹெக்டேரில் மழைநீா் சூழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அங்கு மழை நீா் முழுவதும் வடிய வேண்டும். வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் எந்தெந்த பகுதியில் பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா். அதன் பிறகே பாதிப்பு விவரம் முழுமையாகத் தெரிய வரும். மழை பாதிப்பு தொடா்பாக மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு 20 புகாா்கள் வந்துள்ளன. அவற்றை அந்தந்தப் பகுதி அதிகாரிகள் மூலம் பாா்வையிட்டு நிவா்த்தி செய்யப்பட்டு வருகிறது. கனமழையால் எங்கெங்கு பாதிப்பு இருக்கும் என்பதை முன்னரே கண்டறிந்து அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எவ்வளவு மழை வந்தாலும் எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா்நிலையில் உள்ளது. கண்காணிப்புக் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் செயல்படுகிறது. யாரேனும் பாதிக்கப்பட்டால் அவா்களை தங்கவைத்து பராமரிக்க மையங்களும் தயாா்நிலையில் உள்ளன என்றாா் அவா்.