மதுக்கடை இல்லாத கிராமத்தில் 24 மணி நேரமும் மதுவிற்பனை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா்
சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக் மதுக்கடை இல்லாத கிராமத்தில், 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை நடைபெறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.
இது குறித்து, கட்சியின் சத்தியமங்கலம் வட்டச் செயலாளா் முருகன், மாவட்டச் செயலாளா் ரகுராமன், செயற்குழு உறுப்பினா்கள் கோமதி, சுப்பிரமணியன், சுந்தரராஜன் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: சத்தியமங்கலம் வட்டம், உக்கரம் ஊராட்சியில் மில்மேடு, பெரியூா், அண்ணா நகா், பெரியாா் நகா், வண்டிபாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இல்லை. புளியம்பட்டி செல்லும் வழியில் நம்பியூா் வட்டத்துக்கு உள்பட்ட காவிலிபாளையம், சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், விண்ணப்பள்ளி பகுதிகளில் தலா ஒரு டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.
மதுக்கடையே இல்லாத உக்கரம் ஊராட்சியில் தனியாா் பள்ளி அருகே கிடங்கு அமைத்து 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்த தகவல் தெரிந்தும் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.