இலவச வீட்டுமனைப் பட்டா நிலத்தை அளவீடு செய்யாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைப்பயணம்
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய நிலத்தை அளவீடு செய்யாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.
அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு, நிலமற்ற ஏழை விவசாயி, கூலி தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கடந்த 1994-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த இடம் அளவீடு செய்துத்தராமல் உள்ளது.
இதைக் கண்டித்து பெருமாநல்லூரில் இருந்து ஆட்சியா் அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு அங்கு குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்திருந்தனா். அதன்படி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பெருமாநல்லூா் நான்கு வழிச் சாலை சந்திப்பில் இருந்து திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை நடைப்பயணத்தைத் தொடங்கினா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியா் அலுவலகத்துக்கு வேனில் அழைத்துச் சென்றனா்.
இதையடுத்து, அங்கு மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் நிலத்தை அளவீடு செய்துத் தர வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் தெரிவித்தனா்.