கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு: கொமுக தலைவா் பெஸ்ட் ராமசாமி
சதமடித்தவருக்கு அறிவுரை ஏன்? கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ஆவேசம்!
விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கோலிக்கு மட்டும் அறிவுரை கூறுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விராட் கோலி சமீபத்தில் பெரும்பாலான போட்டிகளில் ஆஃப் - சைடு செல்லும் பந்தினை கவர் டிரைவ் ஆட முயற்சித்து ஆட்டமிழந்து வருகிறார்.
2024-2025 சீசனில் கோலியின் முதல் 8 இன்னிங்ஸில் 73 ரன்கள் (6, 47, 0, 1, 4, , 7, 3 ரன்கள்) மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 9.125 என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்கதையான கதையாக மாறிவருவதால் சமீபத்தில் இந்தியாவின் லெஜெண்ட் சுனில் கவாஸ்கர், “ சச்சினின் 241 ரன்களை கோலி நினைக்க வேண்டும். அதில் சச்சின் கவர் டிரைவ் ஷாட்களை ஆடவே இல்லை. அவர் பெரும்பாலான ரன்களை ஆன்-சைடில் அடித்தார். அதற்கு முன் அவர் கவர் டிரைவ் ஷாட்களை விளையாட முயற்சித்த போது அவுட் ஆக்கப்பட்டார். அதனால் கோலியும் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
கோலிக்கு மட்டும் அறிவுரை என்ன?
இந்த நிலையில் விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியதாவது:
சுனில் கவாஸ்கர் சிறந்த வீரர். அவரது அறிவுறுத்தல்களை ஏற்கிறோம். ஆனால், அதேவேளையில் அவர் மற்றவர்களுக்கும் அறிவுரைகளை வழங்க வேண்டும்.
2008 முதல் கோலி சிறப்பாகவே விளையாடுகிறார். இரண்டு இன்னிங்ஸை வைத்து கோலி ஃபார்மில் இல்லை என்பது அநியாயம்.
ஏற்கனவே, இந்தத் தொடரில் கோலி சதமடித்துள்ளார். இந்தத் தொடரில் யாராவது சதமடித்துள்ளார்களா?
கோலி கம்பேக் தருவார்
உண்மையை சொல்ல வேண்டுமானால், எனக்கு இந்த புள்ளி விவரங்கள் குறித்து தெரியாது. எப்படியான வீரர் அவர். கண்டிப்பாக மீண்டு வருவார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கோலி தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறார்.
தொழில்நுட்ப ரீதியாகவும் சரி மனதளவிலும் சரி கோலிக்கு எந்தப் பிரச்னைகளையும் இல்லை. கோலி பக்குவப்பட்டவர். ஆட்டத்தை நன்றாக புரிந்துகொள்பவர்.
நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வோம். அதை பொதுவெளியில் சொல்லமுடியாது. என்ன தவறாக போகிறதென கோலிக்கு தெரியும். கோலி மீண்டும் கம்பேக் தருவார். இந்தத் தொடரிலேயே நீங்களே அதைப் பார்ப்பீர்கள் என்றார்.