நாயகியாக அறிமுகமாகும் எதிர்நீச்சல் ஆதிரை! ஜோடியாகும் ஸ்ரீகுமார்!
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற சத்யா தேவராஜன் புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவருக்கு ஜோடியாக யாரடி நீ மோகினி, வானத்தைப் போல ஆகிய தொடர்களில் நாயகனாக நடித்த ஸ்ரீ குமார் நடிக்கவுள்ளார்.
சின்ன திரையில் சத்யாவும் ஸ்ரீகுமாரும் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தத் தொடருக்கு தனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இரு தொடர்களை இயக்கும் இயக்குநர்
சின்ன மருமகள் தொடரை இயக்கிவரும் மனோஜ் என்பவர் தனம் தொடரையும் இயக்கவுள்ளார். ஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் நிறுவனம் தனம் தொடரைத் தயாரிக்கவுள்ளது. சின்ன மருமகள் தொடரையும் இந்நிறுவனமே தயாரிக்கிறது.
எதிர்நீச்சல் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சத்யா. ஆதி குணசேகரனின் தங்கையாக நடித்தார். இதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். தற்போது திருமண மண்டபத்தைக் கட்டி புதிய தொழிலையும் தொடங்கியுள்ளார்.
இதேபோன்று நடிகர் ஸ்ரீகுமார், சின்ன திரையில் பல தொடர்களில் நடித்துள்ளார். ஆனந்தம், இதயம், பொம்மலாட்டம், தேவதையை கண்டேன், பிள்ளை நிலா உள்ளிட்ட பல தொடர்களில் நாயகனாக நடித்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, வானத்தைப் போல ஆகிய தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து தனம் என்ற புதிய தொடரில் நடிக்கவுள்ளனர்.
எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், அதில் சத்யா இருப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!