மதுரையில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் குறித்து திட்ட இயக்குநர் தகவல்!
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் குழு ஆய்வு செய்தனர்.
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லுாரியில் 2010 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளும் பாராட்டும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநருமான அர்ஜுனனும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கிய அர்ஜுனன் ``மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:ஆர்-வாலட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% சலுகை!
கடந்த 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டமும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் சனிக்கிழமை, (டிச. 21) மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான ஆய்வில் அர்ஜுனன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர் கூறியதாவது, ``மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ரூ. 11,400 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருக்கிறோம்.
மதுரை திருமங்கலம், ஒத்தக்கடை, புதூர், தமிழ்நாடு ஹோட்டல், ஆண்டாள்புரம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. மீனாட்சியம்மன் கோயில், ரயில் நிலையங்களிலும் நிறுத்தங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதிக்கும் மெட்ரோ ரயில் தடம் நீட்டிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.