முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தேர்தல் வந்துவிட்டாலே போதும்...’ | அத்தியாயம் 8
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
தேர்தல் வந்துவிட்டாலே போதும்... அரசியல் கட்சிகள் பிஸியாகி விடுவதைப் போலவே, தமிழ்நாடு விடுதலைப் படையினரும் பிஸியாகி விடுவார்கள். கட்சிகளுக்குத் தேர்தல் பிரசாரம் தான் வேலை... இவர்களுக்கு ' தேர்தல் புறக்கணிப்பு கோஷமெழுப்புவது தான் முழுநேரப் பணி!
'நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம்! ', ' தேர்தல் பாதை திருடர்பாதை புரட்சிப் பாதையே மக்கள் பாதை என்பது போன்ற முழக்கங்களோடு கிராமங்களில் கையால் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டுவார்கள். இரவில் கிராமங்களில் கலைக்குழுவினரோடு போய் கொண்டிருக்கும் மக்களை எழுப்பிப் பிரசாரப் பாடல்களைப் பாடுவார்கள்.
96 -ம் ஆண்டு தேர்தலின் போதும் இதே ரீதியில் இவர்களது பிரசாரம் நடந்தது. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக ஏதாவது ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் குண்டு வெடிக்கச் செய்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் இவர்கள் ஸ்டைல்.
அதேபோல் இந்த முறையும் நடந்தது. ஏப்ரல் இருபத்தொன்றாம் தேதி ஒரே இரண்டு குழுக்களாய் போன இவர்கள், விழுப்புரம் அருகே இருக்கும் பேரணி ரயில்வே ஸ்டேஷனிலும், மயிலாடுதுறை தொலைக்காட்சி நிலையத்திலும் குண்டு வெடித்தனர். கூடவே ' போலி ஜனநாயகத்துக்கு எதிர்ப்பு ' என்ற போஸ்டர்களை வீசிவிட்ட ட்டுப் போனார்கள்.
இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, தேர்தல் புறக்கணிப்பு பிரசாரத்துக்காக நிதி திரட்டும் வேலையிலும் மும்முரமாய் இறங்கினார்கள்.
இம்முறை உண்டியல் வசூலோ, கொள்ளையோ நடத்த தேவையிருக்காமல், வாகாய் வந்து மாட்டியது விவகாரம் ஒன்று.
பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளாற்றின் கரையோரமாய் இருக்கும் ஆலத்தியூர், தளவாய் ஆகிய இரண்டு கிராமங்களில் சிமெண்ட் தொழிற்சாலைகள் இரண்டு உருவாகிக் கொண்டிருந்தன. ஒன்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடையது. இன்னொன்று கொரமண்டல் சிமெண்ட் கம்பெனியுடையது. இந்த இரண்டு தொழிற்சாலைகளுமாய் சேர்ந்து கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டிருந்தன.
தொழிற்சாலைகள் ஒருபுறம் வளர, ' நிலம் கொடுத்தோருக்கு உரிய இழப்பீடு. நிரந்தர வேலை தரவேண்டும் என்று சிலர் கொடிபிடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பல்வேறு குழுக்களாய் போராடிய இவர்களில் ஒருசிலர், தமிழ்நாடு விடுதலைப்படையின் ஆதரவு பெற்றவர்கள்.
விடுதலைப்படை இந்தப் போராட்டத்தை ஆதரிக்க, வேறுசில மறைமுக காரணங்களும் இருந்தன. இந்தத் தொழிற்சாலை வந்த உடனே அந்த ஏரியாவில் முந்திரிக்காடுகள் காணாமல் போய் விட்டன. இதேபோல் தொடர்ச்சியாய் தொழிற்சாலைகள், கட்டடங்கள் என்று வளர்ந்து இந்த ஏரியா காடுகளை இழந்து, தாங்கள் புகலிடம் அற்றுப்போய் விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது இவர்களுக்கு. இந்தப் பயத்தில் ' சிமெண்ட் தொழிற்சாலைகள் வந்தால் முந்திரிச் செடிகள் காய்க்காமல் போய்விடும். அந்த அளவுக்கு தொழிற்சாலைகள் இந்த ஏரியாவை மாசுபடுத்தி விடும் ' என்ற கிளப்பி விட்டனர். அந்த வருடம் ஒருவகை மஞ்சள் ஈ தாக்குதலால் முந்திரிச் செடிகள் உண்மையிலேயே காய்ச்காமல் போய் விட்டன. ' காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி ' இந்த வதந்தியை பலர் நம்பி, போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள.
இப்படி ஒரு புறம் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, இன்னொருபுறம் தேர்தல் புறக்கணிப்புப் பிரசார நிதிக்காக ஆலை நிர்வாகத்துடன் ரகசிய பேரத்தில் இறங்க முடிவெடுத்தனர். ஆனால், இவர்கள் திட்டத்தை குறுக்கே புகுந்து கெடுத்தார் ராமகிருஷ்ணன். இவரும் ஆரம்பத்தில் விடுதலைப் படை யின் அனுதாபியாய் இருந்தவர்தான். சிமெண்ட் தொழிற்சாலைகளை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்தவர்தான். ஆனால், ஆலை நிர்வாகத்தோடு தன் ஊர்க்காரர் களுக்காக ஒப்பந்தம் போட்டுக் கொண்டு போராட்டத்தைக் கைவிட்டார். அதோடு சிமெண்ட் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் தொடர்பான காண்ட்ராக்ட்டும் இவருக்குக் கிடைக்க, அதற்கென ஆள் பட்டாளத்தை அமர்த்திக் கொண்டு தொழிலைப் பார்ப்பதில் பிஸியாகி விட்டார்.
இதனாலேயே இயக்கத்துக்கு இவரை ஆகாது போயிற்று. அதோடு இயக்கத்து ஆதரவு பெற்ற ஆட்கள் சிலர் சிமெண்ட் தொழிற்சாலைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய போது, போலீஸையும் முந்திக்கொண்டு அவர்களை விரட்டியது ராமகிருஷ்ணனின் தமிழ்நாடு ஆட்கள் தான்!
ஆலை நிர்வாகத்தோடு ரகசிய பேரம் நடத்திப் பணம் பெறலாம் என்ற நப்பாசையில் போனவர்களையும் ராமகிருஷ்ணனின் ஆட்கள் விரட்டினர்.
ரௌத்திரமான இயக்கம். கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டியது. " அவன் உயிரோட இருக்சறவரைக்கும் நம்மால நிம்மதியா நடமாட முடியாது.
நாம் அவனை உடனே அழிச்சாகணும். இல்லைனா அவன் வளர்ந்து நம்மை அழிச்சிடுவான் " ஆவேசப் பட்டார் சீனியர் தோழர்.
ராமகிருஷ்ணனின் சொந்த ஊரான முள்ளுக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு பையனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். மீசை அப்போது தான் எட்டிப் பார்க்கும் வயது என்றாலும் நிதானமாய் பேசினான் அவன்.
" இந்த விஷயத்துல நாம ரொம்ப அவசரம் காட்டக்கூடாது தோழர். ஒரு பெரிய திட்டம் வேணும். எடுத்தோம், கவிழ்த் தோம்னு இதைச் செய்துட முடியாது. ராமகிருஷ்ணன் இப்போ சொந்த வீட்டுல பெரும்பாலும் தங்கற தில்லை. பெண்ணாடத்துல தனியா எடுத்துத் தங்கியிருக்கார். அவரோட எப்பவும் ஏழெட்டு பேர் இருக்காங்க. எங்கே போறதுன்னாலும் தன்னோட சொந்த ஜீப்லதான் போறார். ஜீப்பிலும் கும்பல் இருக்கும். அவர் கூட இருக்கறவங்களும் நம்மளை மாதிரி எதுக்கும் துணிஞ்ச ஆசாமிங்கதான். காத்திருப்போம். அவரைக் கண்காணிக்க ஆள் போடுவோம். தனியா மாட்டும் போது வச்சிக்கிடலாம் ' ' என்றான்.
எல்லாருமே யோசிக்காமல் சம்மதம் சொல்லிவிட்டார்கள். மறு நாளிலிருந்த ராமகிருஷ்ணனை கண்காணிக்க ஒருத்தனை நியமித்து விட்டார்கள். காலையில் ராமகிருஷ்ணன் கிளம்பும் வரை அந்தத் தெருவின் மூலையில் நின்று கண்காணிப்பது.... இரவு திரும்பி வந்த பிறகு எத்தனை பேர் கூட இருக்கிறார்கள் என்று பார்த்து சொல்வது... இதுதான் வேலை.
ஒருவேளை ராமகிருஷ்ணன் காலையில் ஆலைக்கோ, வெளியிலோ கிளம்பாமல் அறையில் இருந்தாலோ, ராத்திரியில் தன்னுடன் வந்த ஆட்களை அனுப்பிவிட்டு தனியாய் தங்கினாலோ உடனடியாய் தகவல் தரும்படி உத்தரவு. தினமும் ஒரே ஆள் போனால் சந்தேகம் வரும் என்று அடிக்கடி ஆட்களை மாற்றினார்கள். எல்லோருமே எதற்கும் தயாராய் அதிர்ஷ்ட நாளுக்காகக் காத்திருந்தார்கள்.
சித்ரா பௌர்ணமி வாகாய் வந்து மாட்டியது. 96 - ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி... ஒருபுறம் தேர்தல் பரபரப்பு... சித்ரா பௌர்ணமி விழாக்கொண்டாட்டங்கள் இன்னொரு புறம்.
ஊரே திருவிழாக் கொண்டாட்டத்தில் இருந்தது. அன்று ராமகிருஷ்ணன் தனியாளாய் வீட்டுக்கு வந்தார். ' ஊர் முழுக்க திருவிழா கும்பல்.... யார் என்ன செய்து விட முடியும்? ' என்ற தைரியமாக இருக்கலாம். வாசலில் ஜீப்பை ஓரங்கட்டிவிட்டு வீட்டுக்குள் போய் நிம்மதியாய் படுத்தார்.
நிமிடங்களில் தகவல் இயக்க ஆட்களுக்குப் போய் சேர்ந்தது.... தயாராய் இருந்த ஏழு பேர் பைக்குகளில் கிளம்பி வெள்ளாற்றைக் கடந்து பெண்ணாடம் வந்தார்கள். அதிகாலை மூன்று மணி..... தெருவே உறங்கிக் கொண்டிருந்தது.
எல்லா பைக்குகளும் ராமகிருஷ்ணன் வீட்டுக்குக் கொஞ்சம் முன்னாலேயே அணைக்கப்பட்டன. அங்கேயே வண்டிகளை ஓரங்கட்டிவிட்டு, ஓசையில்லாமல் நடந்து வீட்டு வாசலுக்கு வந்தார்கள்.
ராமகிருஷ்ணன் எங்கும் வெளியில் கிளம்பிவிடவில்லை என்பதற்கு அடையாளமாய் ஜீப் அங்கேயே நின்றிருந்தது. இரண்டு பேர் வாசலில் நின்று கொண்டார்கள். அதையொட்டியே ஒரு ஜன்னல். யாராவது நேரங்கெட்ட நேரத்தில் வந்து கதவைத் தட்டினால், அந்த ஜன்னல் கதவைத் திறந்து, ' யாரது? ' என்று கேட்டு, தெரிந்தவர்களாய் இருந்தால் மட்டுமே வாசல் கதவைத் திறப்பது ராமகிருஷ்ணனின் பழக்கம். அதையும் இவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
ஜன்னலுக்கு இந்தப் பக்கமாய் இரண்டுபேர், அந்தப் பக்கமாய் இரண்டு பேர் என்று பிரிந்து நின்றார்கள். ஒருவன் போய் ஜன்னலைத் தட்டினான். பதில் இல்லை. இரண்டாம் வாசலை முறை சத்தமாய் தட்டிய பிறகு, " யாரது? " என்று ராமகிருஷ்ணனின் குரல் கேட்டது. " நான்தான்! " என்று மட்டும் பதில் சொன்னான் தட்டியவன்.
" யாருப்பா! " என்று கேட்டவாறே தூக்கத்தைக் கலைத்து ராமகிருஷ்ணன் ஜன்னலை நோக்கி நடந்துவரும் சத்தம் கேட்டது. ஜன்னலைத் தட்டியவன் அப்படியே குனிந்து பின்வாங்கினான். தூக்கக் கலக்கத்துடனே கதவைத்திறந்த ராமகிருஷ்ணன், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் துடைத்துவிட்ட மாதிரி இருந்தது தெரு. யாரையும் காணோம்... யோசனையோடு ராமகிருஷ்ணன் ஜன்னல் கதவை மூட எத்தனிக்க... திடீரென ஜன்னல் ஓரமாய் இருந்த இரண்டு பேரும் தாவி, திறந்திருந்த ஜன்னல் எதிரே வந்தார்கள்.
" சிமெண்ட் கம்பெனிக்கு சோரம் போய் பணம் சம்பாதித்த பயலே... னிமேலும் நீ உயிரோட இருக்கக்கூடாது! " என்று ஒருவன் கத்த, இன்னொருவன் எதையோ கையிலெடுத்து உள்ளே வீசினான்.
மேலும் சலசலக்கும்....