'StartUp' சாகசம் 3: `மின்சாரமில்லா குடிநீர் வடிகட்டி..!’ - சாத்தியமான கதை
இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்களின் அன்றாட தேவைகளில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்தியாவின் நீர் வளம் சீரானதாக இல்லை. மழைக்காலத்தில் அதிகப்படியான மழை பெய்தாலும், வறட்சியான காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைவரும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் நிலத்தடி நீரை நம்பி மட்டுமே இருக்கவேண்டிய நிலையை இந்தியர்களுக்கு உள்ளது. ஆனால் நிலத்தடி நீரில் மாசுபாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தண்ணீரின் தரம் குறைந்துள்ளது.
தண்ணீரில் காணப்படும் மாசுக்காரணிகள்:
பாக்டீரியா மற்றும் வைரஸ்கள்: இந்த நுண்ணுயிரிகள் பல நோய்களை பரப்பும் திறன் கொண்டவை.
கனிமங்கள் மற்றும் உலோகங்கள்: அதிக அளவு கனிமங்கள் மற்றும் உலோகங்கள் தண்ணீரில் கலந்திருந்தால், அது உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள்: விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் நீர்நிலைகளில் கலந்து தண்ணீரை மாசுபடுத்துகின்றன.
கழிவுநீர்: கழிவுநீர் கலந்த தண்ணீர் பல்வேறு நோய்களை பரப்பும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
புளூரைடு: அதிக அளவு புளூரைடு தண்ணீரில் கலந்திருந்தால், பற்களில் புளூரோசிஸ் என்ற நோய் ஏற்படலாம்.
மேலே உள்ள காரணிகளால் நமக்கு வாட்டர் பில்டர் அத்தியாவசியமாகிறது.
குடிநீர் சிக்கல்
163 மில்லியன் இந்தியர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை
210 மில்லியன் இந்தியர்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதி கிடைக்கவில்லை
21% தொற்று நோய்கள் பாதுகாப்பற்ற தண்ணீருடன் தொடர்புடையவை
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குட்பட்ட 500 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர்
இந்தியாவின் நீர் வளம் சீரானதாக இல்லாததால், தண்ணீரின் தரத்தை மேம்படுத்த நீர் வடிகட்டிகள் அவசியமாகின்றன. நீர் வடிகட்டிகள் பல்வேறு வகையான மாசுக்காரணிகளை நீக்கி, சுத்தமான குடிநீரை வழங்குகின்றன.
இந்தியாவின் நீர் வடிகட்டி சந்தை
இந்தியாவின் நீர் வடிகட்டி சந்தை விரைவாக வளர்ந்து வருகிறது. மக்களின் விழிப்புணர்வு அதிகரித்ததாலும், தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் இந்த சந்தை வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு வகையான நீர் வடிகட்டிகள், RO வடிகட்டிகள், UV வடிகட்டிகள், கார்பன் வடிகட்டிகள், ப்ளுரைடு வடிகட்டிகள் உள்ளிட்டவை இந்த சந்தையில் கிடைக்கின்றன.
நீர் வடிகட்டிகளின் முக்கியமான சிக்கல் என்னவெனில் அதற்கு மின்சாரம் அவசியம், அதிகப்படியான நீர் வீணாவதும் ஒரு சிக்கல்.
இந்தியாவில் குடிநீர் வடிகட்டிகளின் சிக்கல்கள் இருக்கும்போது தமிழ்நாட்டில் வாட்ஸ்ன் எனும் பெயரில் மின்சாரம் தேவையில்லாத , முற்றிலும் புதுமையான முறையில் நீர் வடிகட்டி ஒன்றை உருவாக்கியுள்ளர் சந்திரசேகரன் ஜெயராமன்.
``மின்சாரமில்லா குடிநீர் வடிகட்டியை உருவாக்கவேண்டும் என்று எப்போது தோன்றியது? என்ன காரணங்களால் உங்களதுக்கு இது தோன்றியது.?"
``2006 ல் சிதிலமடைந்த கோயிலை கண்டறிந்து மீட்பதற்காக ரீச் பவுண்டேசன் சார்பாக தமிழகம் முழுதும் 3 – 4 வருடங்கள் சுமார் 2000 கிராமங்களாவது சென்று பழங்கால கோவில்களை மீட்டெடுப்பதற்காகவும் ஆவணப்படுத்தவும் ஆராய்ந்திருப்பேன். ஆவணப்படுத்தும் பொழுது பல இடங்களில் ஊருக்குள் செல்லும்போது குடிக்க குடிநீர் கொடுப்பார்கள். உடனே தொண்டையில் ஏதாவது செய்யும். மறுநாள் காய்ச்சல், வெளி உபாதைகள் வந்துவிடும். விருந்தோம்பலுக்கு பெயர் போன தமிழகத்தில் எங்காவது நீர் வாங்கிக்குடித்தால் உடனே சிக்கலாகிவிடுகிறதே... என்ன இது ஆராய்ந்ததில் நல்ல குடிநீர் கிடைப்பது அரிது. சில நேரங்களில் பாட்டில்களில், கேன்களில் அடைத்து விற்கும் குடிநீர் கூட தரமில்லாத நீர்தான். பாட்டில்களிலும் தரமில்லாத குடிநீரை குடிக்கிறார்கள் என்ற நிதர்சன உண்மை தெரிந்தது. கழிப்பறையும் அதே போலதான். என்னதான் SWATCH BHARATH வந்தாலும் பொது கழிப்பறையும் சரியாக இல்லை.
அதனால் தன் வாட்சன் நிறுவனத்தை ஆரம்பித்தேன். WATER AND SANITATION என்பதின் சுருக்கமே வாட்சன். குடிநீர் மற்றும் கழிப்பறை இது இரண்டும் கிராம மக்களுக்கு அத்தியாய தேவை. மக்களுக்கு இது கிடைக்காது, நான் விஞ்ஞானம் படித்து என்ன பயன்? அதனால் சில நல்ல பொருள்களை உருவாக்க வேண்டும் என்று தோன்றியாதால் ஆரம்பிக்கப்பட்டதே இந்த வாட்சன்(WATSAN) குடிநீர் வடிகட்டி” என்கிறார் சந்திரசேகரன் ஜெயராமன்.
மேலும், ``2009 ல் இதை ஆரம்பித்தேன். முதலில் என் கையிருப்பைக்கொண்டு என் சொந்த நிறுவனமாக வைத்திருந்தேன் பிறகு, P.N. சுப்பிரமணியம் ஆலோசகராக வந்தார். அதன் பின்அவர் வழிகாட்டுதலில் வாட்சன் நிறுவனத்தை பிரைவேட் நிறுவனம் மாற்றி P.N. சுப்பிரமணியம் துணை நிறுவனராக ஆகி என்னோடு இணைந்து செயல்படுகிறார்” என்றார்.
``உங்கள் வாட்சன் குடிநீர் வடிகட்டி மின்சாரம் இல்லாமல் எப்படி செயல்படுகிறது?”
``நான் இன்று குடிநீரை வடிகட்ட வேண்டும் என்று நினைத்த பொழுது, ஏற்கனவே உள்ள வடிகட்டிகள் எதனால் நம் மக்களிடையே போய் சேர்க்க இயலவில்லை என்ற கேள்வியும் என் மனதில் எழுந்தது. முதல் காரணம், மின்சாரத்தில் ஓடும் குடிநீர் வடிகட்டி. Reverse osmosis என்று சொல்லக்கூடிய இந்த வகைக் குடிநீர். அதில் சில பாதகங்கள் உள்ளது. ஒரு விஞ்ஞானியாக ஒரு தொழில்நுட்ப பொறியாளராக நான் கண்டறிந்தது மின்சாரம் இல்லாமலே இதை செய்ய முடியும் என்பதுதான்
இரண்டாவது, குடிநீர் விரயமாகிறது. ஒரு RO மெஷினில் 100 லிட்டர் சுத்திரித்து எடுக்க வேண்டும் என்றால், அதில் ஒரு மடங்கு நீரை அதிகமாக கொடுக்க வேண்டும். மீதம் 50 விழுக்காடு நீர் விரயமாகும். அதில் நல்ல உப்பு, நல்ல மினரல்கள், தாதுப் பொருட்கள், கெட்ட மினரல்கள், கெட்ட தாது பொருட்கள் எல்லாவற்றையும் அந்த RO வெளியே எடுத்துவிடும்.
இதில் வேறு சில பிரச்னைகளும் உண்டு. உடம்புக்கு சேர வேண்டிய நல்ல உப்பு மற்றும் நல்ல மினரல்களை அது எடுத்து விடுவதால் உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தி பூஜ்ஜியம் ஆகிவிடும்.
மிக சுத்தமான நீரை கொடுப்பதால் மிக குறைந்த TDS (TOTAL DISSOVED SOLIDS) மிகவும் குறைந்திருப்பதால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. மிக சுத்திகரிப்பான குடிநீரில் நல்ல உப்பும் எந்த விதமான தாதுப்பொருளும் இல்லாமல் உடம்புக்கு சேர வேண்டிய இரும்பு, மக்னீசியம், கால்சியம், அயோடின் போன்ற நல்ல தாதுப் பொருட்கள் சேராததால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறது.
உடலும் பலவீனம் அடைகிறது. முன்பே நான் இதை கண்டறிந்ததால் இந்த மூன்றையும் முக்கியமானதொரு காரணிகளாக என்னுடைய குடிநீர் வடிகட்டி அமைக்கும்போதே நான் முடிவெடுத்துக் கொண்டேன்.
முக்கியமாக, வருடாந்திர பராமரிப்பு தேவைப்படாத வகையிலும் உருவாக்கின்னேன். மக்களே எளிதாக இதன் வடிகட்டிகளை மாற்றிக்கொள்ளலாம். அதனை உபயோகித்துக் கொள்ளலாம். எனவே மிக எளிதாக 2 பக்கெட்டுகள் மேலே ஒரு குடுவை கீழே ஒரு குடுவை இடையில் ஒரு துளை ஏற்படுத்தி அதில் இந்த கேன்களை நட்டு போல்ட்டினால் பொருத்தினால் அந்த ஃபில்ட்டர் தயார் ஆகிவிடும்.
எங்கள் வாட்சன் வடிகட்டிகளின் முக்கிய அம்சமே Fluride வடிகட்டியும் இருப்பதுதான். தமிழ்நாட்டின் பல இடங்களில் பலரின் பற்கள் கரையோடு இருக்கும். அதற்குக்காரணம் இந்த ப்ளுரைடுதான். இதற்காக நாங்கள் சுண்ணாம்புக் கல்லில் ஒரு நானோ கோட்டிங் செய்திருக்கிறோம். அதன்மூலம் அதிக ஃளூரைடை அந்த சுண்ணாம்புக்கல் ஈர்த்துக்கொள்ளும். நீரை ஃளூரைடு அற்ற நீராக மாற்றிவிடும்.”
``உங்கள் குடிநீர் கட்டி எப்படி என்ன தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது?”
``எங்கள் வடிகட்டியின் சிறப்பம்சமே 8 - 12 மணி நேரம் அதனை நன்றாக Soak செய்தால் ஃளூரைட் அற்ற நீராக மாற்றிவிடும். மீதமுள்ள பாக்டீரியா, இரும்பு மற்றும் வேண்டாத பொருட்களை நீர்த்துவதற்கு மற்றும் காரமில்லாமல் அமிலமில்லாமல் நியூட்ரலாக ph 7 என்று சொல்வார்கள் அதனை எளிமையாக செய்ய வேண்டும். மக்களே அதனை இயக்க முடியும்.இதை எளிமையாக பொருத்தவியலும். அந்த வகையில் எங்களது வாட்சன் மின்சாரமற்ற நீர் விரயமகாத இயற்கை குடிநீர் வடிகட்டி.”
`வாட்சன் குடிநீர் வடிகட்டி உருவானது எப்படி’
மத்திய விஞ்ஞான கழகங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் உள்ளன. இதில் புவனேஷ்வரில் உள்ள CSR ல் வேதியியல் பொருட்கள், பீங்கான் போன்ற மண் பொருட்களினால் என்ன செய்ய முடியும் போன்ற ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் குடிநீர் வடிகட்டி தொழில்நுட்பத்தை கேட்டறிந்தேன். 160 பேர் இ்ந்த தொழில் நுட்பத்தில் லைசன்ஸ் பெற்றார்கள்.
இதற்கு சிறிய தொகை நாம் அவர்களுக்கு கட்ட வேண்டும். அதனை லைசன்ஸ் C என்று சொல்வார்கள். அந்தத் தொகையை கட்டினால் இந்த கேண்டில்கள் உருவாக்குவதற்கான லைசன்ஸ் தருவார்கள். பிரச்சனை என்னவென்றால் லைசன்ஸ் வாங்குவதோ அல்லது பணம் கட்டுவதோ அல்ல.
2 டன் 3 டன் என்று அதனை கலந்து பெரிய அளவில் செய்யும் பொழுது அந்த விகிதாசாரம் மாறும். அதன் தன்மை மாறும். இந்த நுண்ணிய துளைகள் (nano holes) லிருந்து உருவாகாது. இதில் உள்ள சீக்ரெட் என்னவென்றால் செங்கல் கற்களில் nano holes உருவாகிறது. Nano holes பாக்டீரியா கிருமிகளை விட சிறியதாக இருக்கும். இரும்புத்துகள்கள், மினரல்கள், உப்புகள் இவைகளை உள்ளே நுழைய முடியாதபடி அந்த holes தடுத்துக்கொள்ளும். மேலேயே அவற்றை வடிகட்டி விடும். தூய நீர் மட்டும் வடிகட்டி குடிக்கும் நீராக கீழே வடிகட்டிவிடும். அது தான் இந்த டெக்னாலஜி.
ஆனால் மீதம் 159 பேர் இதனை மேற்கொண்டு செய்யமுடியாமல் நிறுத்தி விட்டார்கள். மேற்கொண்டு அந்த தொழிலை தொடரவில்லை. நான் ஒருவன் மட்டும் இதை பல முறை பல விதமான ஆராச்சிகள் செய்து தொடர்ந்து பெரிய அளவில் செய்தாலும் எந்த சிக்கலும் இல்லாதவாறு எப்படி செய்வது என்பதை கண்டறிந்தேன். இதில் இன்னொரு காரணம் நான் கோவில் கோவிலாக சென்றதால் பல கிராமங்களில் பல மண்பாண்டத் தொழிலாளிகளை சந்தித்துள்ளேன். அவர்கள் எதனால் சில களிமண்ணை உபயோகிக்கிறார்கள் சில களிமண்ணை நிராகரித்து விடுகிறார்கள் என்பதனையும் அந்த தொழில்நுட்பத்தையும் அவர்களிடம் இருந்து கண்டறிந்தேன். எனவே பழங்கால குயவர்கள் எந்தமாதிரி மண்ணை கொண்டு செய்கிறார்கள் என்பதனையும், CSIR IIMD தொழில்நுட்பத்தையும் கலந்து நான் எனக்கே எனக்கு என ஒரு கேண்டில்கள் களிமண்ணால் செய்த இந்த NANO HOLES உள்ள கட்டிகளை உருவாக்கினேன். இது தான் எங்கள் வாட்சன் குடிநீர் வடிட்டியீில் உள்ள தொழில்நுட்பம்
பிறகு, ஒரு சில வருடங்களுக்குப் பிறகு தெரிய வந்தது RO வினால் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது என்றும், ஆர்சனிக் என்ற தாதுப்பொருள் அது குடிநீரில் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை கண்டறிந்தேன்.
அதுகுறித்து IIT MADRAS டாக்டர்.பிரதீப் என்பவரின் SCIENTIFIC PAPER PUBLISH ஆகி இருந்தது. அதை வைத்துக் கொண்டு அவரிடம் புரிந்துணர்வு ஏற்படுத்தி அதை ஒரு பொருளாக மாற்றி ஒரு Add on அதை என்னுடைய water filter ல் நட்டுக்கு பதிலாக அந்த பொதி(cartridge) உள்ளே சொருகினால் ஆர்சனிக் எடுத்துவிடும். இந்த சுலபமான முறையை அவரிடம் கைகோர்த்து நான் இதை செய்தேன். கிட்டதட்ட 2 லட்சம் மக்களுக்கு இது பயன்பட்டுள்ளது. அதேபோல psg டெக்னாலஜி என்ற கல்லூரியில் இதே போல ஒரு ஆய்வுக் கட்டுரையை டாக்டர். ராமமூர்த்தி என்பவர் ஃளுரைடை எப்படி எடுப்பது என்பதை பதிப்பிருந்தார்
ஆனால் அவருக்கும் 100 ml, 50 ml க்கும் தாண்டி கிலோ கணக்கில் அவர் பார்த்ததில்லை. நான் எடுத்த உடனே 800 கிலோ செய்கிறேன் என்று சொன்னவுடன் என்னை உற்சாகப்படுத்தி செய்ய வைத்தார்.
அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழியே psg கல்லூரி எனக்கு இலவசமாக கொடுத்தது. ஏனெனில் யாரும் இதை அதிகமாக அளவில் செய்ய யாரும் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் பெரிய அளவில் முயற்சிக்கும்போது பார்முலாவில் இருப்பது மாதிரி துல்லியமாக வராது. அதன் தன்மை, அழுத்தம், வெப்பநிலை போன்றவற்றால் துல்லியத்தன்மை வராது. இந்த சிக்கல்களை கண்டறிந்து flurodrome என்ற வடிகட்டியை கண்டறிந்து வாட்சன் குடிநீர் வடிகட்டியுடன் இணைத்தேன். மேலும் சில ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இப்படித்தான் என்னுடைய சாதாரண பில்டர், ஆர்சனிக் addon filter, flurodrom filter செய்ய முடிந்தது.
தற்போது 50 லிட்டர், 200 லிட்டர், 500 லிட்டர், 2500 லிட்டர் வரை செய்துள்ளேன். இன்று வரை ஏறத்தாழ 5 லட்சம் குடும்பங்களுக்கு எனது குடிநீர் வடிகட்டி இந்தியா எங்கிலும் பல குக்கிராமங்களுக்கு சென்று உள்ளது. அதற்கு முக்கிய காரணம் பல தொண்டு நிறுவனங்கள்தான் இதை முன்னெடுத்து இருக்கின்றன.
கேரள மாநிலத்தில் வெள்ளம் வந்த போது 1500 மற்றும் சென்னை வெள்ளம் வந்த சமயம் 12 ஆயிரம் குடிநீர் வடிகட்டிகளை கெடுத்து உள்ளோம், அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளம் வந்த சமயத்திலும் கொடுத்துள்ளோம். காரணம் வெள்ள பெருக்கு சமயம் மின்சாரம் இல்லாமல் எந்த RO Machines உபயோகம் செய்ய இயலாது.”
`கிடைத்த அங்கீகாரம்’
``மத்திய அரசு Har Ghar Jal என்று ஒரு திட்டத்தினை கொண்டுவந்துள்ளது. அதாவது எல்லாருடைய வீட்டிலும் குடிநீர் கிடைக்க வேண்டுடும் என்று இந்தத்திடத்தினை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தியா முழுவதும் பல கிராமங்களுக்கு நேரடியாக சென்று நான் ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன். அங்கெல்லாம் போய் என்ன நிலவரம் என்று பார்த்துவிட்டு fluride அதிகமாக உள்ள இடம், arsenic அதிகமாக உள்ள இடங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி டெஸ்டிங் செய்ய சொல்லிக்கொடுத்து அவர்களை water skilled person ஆக மாற்றிக் கொண்டுள்ளேன்
கார்பன் கிரெடிட்
பெரிய நிறுவனங்களிலும், பள்ளிகளும் இதை வாங்கிப்பயன்படுத்தலாம், இதன் முக்கியப்பயன் இதில் கார்பன் கிரெடிட் கிடைக்கும்.
போன வருடத்தில் சிங்கப்பூரில் உள்ள CIC என்ற கம்பெனி 15000 water filter களை எங்களிடம் இருந்து வாங்கி அதனை மத்தியப்பிரதேசத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கொடுத்தாங்க. 15 லிட்டர் water filter ஒரு வருடத்திற்குள் 1 1/2 டன் கார்பன் வெளியிடுதலை நிறுத்துகிறது என்றும் சான்று வாங்கிருக்காங்க. கிட்டதட்ட 22,500 டன் கார்பன் ஒரே வருடத்தில் இந்த சிறிய பில்டர் நிறுத்தியுள்ளது என்பது நிருபணமாயுள்ளது.
CIA ன் BEST INNOVATOR AWARD 2016 எனக்கு கிடைத்தது. நான் விருது வாங்கும்பொழுது தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்தது என்னுடைய மைக்ரோ யூனிட்டும், அசோக் லேலெண்ட் தான்.
அதேமாதிரி #SIKKI அவர்களுடைய WATERPRENEUR விருது வாங்குனேன். 40 லட்சத்துக்கு உண்டான ஒரு GRAND கிடைச்சது. அதைத்தவிர royal academy of enginnering லண்டன்ல fellowship வாங்குன முதல் தமிழன் நான் தான்.
கடந்த 10 வருசங்களா இருந்த எல்லா innovator லியும் innovator of the year என்ற விருது 2024 ல எனக்கு கொடுத்தாங்க. 10 லட்ச ரூபாயும் கொடுத்தாங்க.
இதுமட்டுமல்லாமல் கழிப்பறை fibercase கழிவை அகற்ற வேண்டும் என்று அததை கண்டறிந்தேன். அதற்கான இந்திய அரசும் தொழில்நுட்ப விருது வழங்கியது. இதுவரை கிட்டத்தட்ட 25 TO 35 சர்வதேச அளவில் விருதுகள் பெற்றுள்ளேன்.
காரைக்குடியில் உள்ள CICR (central institute of electro chemicals research) அவர்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கிட்டத்தட்ட 13 லட்சம் RND க்காக செலவு செய்தோம். எதற்காக என்றால் திருப்பூரில் சாயக்கழிவுகளை நல்ல நீராக மாற்ற எளிய முறையில் 80% மின்சார செலவை குறைத்து ELECTRO CHEMISTRY மூலம் செய்வதற்கான ஒப்பந்தங்களும் PROTO TYPE ம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. வரும் வருடத்தில் அதனை நாங்கள் வெளியே சந்தைப்படுத்துவோம். அதற்குண்டான காப்புரிமையும் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.”
`உங்கள் உற்பத்தி மையத்தை பற்றி சொல்லுங்களேன்?’
எனக்காக பெரிய உற்பத்தி மையத்தை அமைக்காமல் ஒரு விவசாயின் இடிபாடுகள் கொண்ட ஒரு பழைய அரிசி ஆலையை புனரமைத்து என்னுடைய உற்பத்திய மையத்தை (factory) செங்கல்பட்டில் உபயோகித்து வருகிறேன். என்னிடம் அங்கே உள்ள பழங்குடியின பெண்கள் தான் வேலை செய்கிறார்கள். 80% பெண்களே இதை உருவாக்குகிறார்கள்”
உலக அளவில் நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்த வண்ணம்தான் உள்ளன. ஆனால் தொடர்ந்து குடிநீர் வடிகட்டிகளின் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்து அவர்களிடம் பேசி பல்வேறு வகையான குடிநீர் வடிகட்டிகளை கொண்டுவரும் சந்திரசேகரன் ஒரு முன்மாதிரிதான். இதுபோன்ற ஆய்வுகள் நமக்கு மிகவும் அவசியம்
குடிநீர் நம்முடைய அடிப்படை, ஆனால் காலம் செல்ல செல்ல நமது சுத்தமான குடிநீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே நாம் இப்போதிருந்தே குடிநீர் குறித்து ஆய்வுகளையும் , ஆராய்ச்சிகளை மேம்படுத்துவம் அவசியம். !
சாகசங்கள் தொடரும்!