``நான் யாரிடமும் 1 ரூபாய் கடன் வாங்கியதில்லை; திருடியதில்லை..'' - விஜய் மல்லையா சொல்வதென்ன?
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துகளை விற்று வந்த ரூ.14,000 கோடியை அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளிடம் திரும்ப தரப்பட்டிருக்கிறது" என்று பேசியிருந்தார்.
இதையொட்டி, நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் மல்லையா, "கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கடன்களை அதனுடைய ரூ.1,200 கோடி வட்டியையும் சேர்த்து ரூ.6,203 கோடி என கடன் தொகையை நிர்ணயித்தது கடன் மீட்பு தீர்ப்பாயம்.
நாடாளுமன்றத்தில் பேசியுள்ள நிதியமைச்சரோ, அமலாக்கத்துறை மூலம் வங்கிகள் என்னுடைய சொத்துகளை விற்று ரூ.14,131.60 கோடியை மீட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இது தீர்ப்பாயத்தின் ரூ.6,203 கோடி கடன் தொகை தீர்ப்பிற்கு எதிரானது ஆகும். ஆனாலும், இன்னமும் நான் பொருளாதார குற்றவாளியாக இருக்கிறேன்.
அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் என்னிடம் இருந்து கடன் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக பெற்றிருக்கும் தொகையை குறித்து சட்டரீதியாக விளக்க வேண்டும். இல்லையென்றால், நான் எடுக்கப்போகும் சட்ட நடவடிக்கைகளுக்கு, அவர்கள் நிவாரணம் அளிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
அடுத்த பதிவில், "கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கடன்களுக்கு நான் கொடுத்துள்ள உத்தரவாதம் சட்டத்திற்கு உட்பட்டதாகும். இருந்தும் என்னிடம் இருந்து, தீர்ப்பு கடன் தொகையை விட அதிகமாக ரூ.8,000 கோடிக்கு மேல் பெறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக என்னை குற்றம் சாட்டுபவர்கள் உள்ளிட்ட யாராவது குரல் கொடுப்பார்களா?
என்னை ஆதாரிக்க நிச்சயம் தைரியம் வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த தைரியம் என் விஷயத்தில் யாருக்கும் கிடையாது" என்று கூறியுள்ளார்.
கடைசியாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், "நான் பதில் சொல்ல பல சி.பி.ஐ வழக்குகள் உள்ளதாக அரசு மற்றும் பல விமர்சகர்கள் கூறுகிறார்கள். எனக்கு எதிராக சி.பி.ஐ பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்குகள் என்ன?
நான் யாரிடமும் ஒரு ரூபாய் கடன் வாங்கியதில்லை, திருடியதில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கடன்களுக்கு உத்தரவாதம் மட்டும் தான் கொடுத்திருந்தேன். இதை வைத்து தான் எனக்கு எதிராக சி.பி.ஐ, ஐ.டி.பி.ஐ வங்கி உள்ளிட்ட பலர் என் மீது ரூ.9,000 கோடி மோசடி புகாரை சுமத்தி உள்ளனர். முழு கடன் தொகை மற்றும் வட்டி கட்டியாகி விட்டது.
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகும், ஏன் என்னுடைய மோசடிகள் குறித்த முடிவான சாட்சிகள் இன்னும் இல்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.