பல் சொத்தைக்கு டீ/காஃபிதான் காரணமா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?
- டாக்டர் ஏ. சுப்பையா
வாய்தான் உடலின் நுழைவாயில் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, உலகத்திலேயே மிகவும் பரவலாகக் காணப்படுகிற நோய் பல் சொத்தையும் ஈறு நோயும்தான்.
'பல் போனா சொல் போச்சு' என்பது முதுமொழி. பல்லின் முக்கியத்துவம் வெறும் சொல்லில் மட்டும் இல்லை. பல் என்பது உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியம். பல் போய்விட்டால் உடல் ஆரோக்கியமும் குலைந்துவிடும். அப்படியென்றால் பல்லுக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
பற்களின் வேலை பேசுவதற்கு மட்டுமின்றி நன்றாக மென்று சாப்பிடுவதற்கு என்பது தெரியும். மென்று சாப்பிடும்போது உணவு நன்றாகக் கூழாகி உள்ளே செல்வதால் உணவு உறிஞ்சப்படுவது எளிதாகிறது. உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், கார்போஹைட்ரேட் என அனைத்தும் உறிஞ்சப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் நன்றாக மெல்லும்போது வரும் அசைவே எச்சில் சுரப்பதற்கும் வயிற்றில் செரிமானத்திற்கான அமிலங்கள் சுரப்பதற்கும் உதவுகிறது.
அரைகுறையாக மென்று சாப்பிட்டால் உணவில் உள்ள சத்துகள் அனைத்தும் உறிஞ்சப்படாது. இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
பல் சொத்தை அல்லது ஈறு நோய் இருக்கிறது என்றால் வாயில் பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கும். பாக்டீரியா அதேஇடத்தில் இருக்காது. அது ரத்தஓட்டத்தில் கலந்து உடல் நலத்தைப் பாதிக்கும். .
பல் ஆரோக்கியம்
இதில் பொதுவான பிரச்னை பல் சொத்தை. இதற்கான காரணங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இனிப்பு சாப்பிட்டால் பல் சொத்தை வரும் என்று கூறுவார்கள். ஆனால், பல் சொத்தைக்கு உணவு மட்டும் காரணமல்ல.
இதில் நான்கு முக்கிய காரணிகள் உள்ளன.
உணவு, நேரம், பாக்டீரியா, மரபணுக்கள் ..
உணவு:
இதில் உணவின் தரம், அளவு என இரண்டு உள்ளன.
உணவின் அளவு:
முந்தைய தலைமுறையில் காலை மற்றும் மாலை ஒரு டீ/காஃபி, மூன்று வேளை உணவு என்பதே பழக்கவழக்கத்தில் இருந்தது. நமக்குத் தெரியாமலேயே இதில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. அதுதான் மிகவும் ஆபத்து.
இப்போதுள்ள விளம்பரங்களை எல்லாம் பார்த்து, வெறுமனே டீ/காஃபி மட்டுமில்லாமல் அதில் ஒரு பிஸ்கட்டை நனைத்துச் சாப்பிடுகிறோம். அதை ஒரு பேஷனாகவும் நினைக்கிறோம்.
அடுத்து காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் ஒரு டீ/காஃபி. அனைத்து அலுவலகங்களிலும் இந்த பழக்கம் இருக்கிறது. அதிலும் டீ மட்டுமில்லாமல் அத்துடன் ஒரு பிஸ்கட்டும் வருகிறது. அதிக வேலைப்பளு இருப்பவர்களுக்கு இது தேவைதான். ஆனால் பல் சொத்தைக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கிறோம் என்பதை உணரவேண்டும்.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்க டயட் மட்டுமே போதுமா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?
மதிய உணவுக்குப் பின்னர் மாலையும் ஒரு டீ/காஃபியுடன் ஒரு சமோசா/பஃப்ஸ் என ஏதோவொன்றைச் சாப்பிடுகிறோம். இவ்வாறு நமக்குத் தெரியாமலே கூடுதலாக உணவில் நிறைய சேர்க்கிறோம். இந்த 'கூடுதல்' என்பதுதான் ஆபத்து.
அடுத்து காஃபி குடித்தால் அந்த சுவை நாக்கில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரும் வாய்கொப்புளிப்பதில்லை. சுவை இருக்க வேண்டும்தான், ஆனால், வாயை சுத்தம் செய்யவில்லை என்றால் காஃபி மற்றும் அதில் உள்ள சர்க்கரை சேர்ந்து வாயில் ஒரு படலம் உருவாகும். அது எச்சிலில் கரைந்து உடலுக்குள் செல்ல சற்று நேரமாகும்.
அந்த நேரத்தில் வாயில் பாக்டீரியா தயாராக இருக்கும். அது அந்த சர்க்கரையை சாப்பிட்டு ஒரு அமிலத்தைச் சுரக்கும். இதுதான் பற்களை அரிக்க ஆரம்பிக்கிறது.
ஆனால், அந்த அமிலம் பற்களை அரிக்கத் தொடங்கும்முன், எச்சில் அதில் இறங்கி அந்த அமிலத்தன்மையை சமநிலை ஆக்கிவிடும். இது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம்.
வாய் கொப்புளித்தாலுமே பற்களில் ஆங்காங்கே உணவுத் துகள்கள் இருக்கத்தான் செய்யும். பாக்டீரியாக்களுக்கு இதுவே போதுமானது.
காலை உணவுக்குப்பின், மதிய உணவுக்குப்பின் வாய் கொப்புளிக்கும் நாம், அலுவலகத்தில் ஒரு காஃபி/டீ அல்லது பிஸ்கட் சாப்பிட்ட பிறகு வாய் கொப்புளிப்பதில்லை. அதற்கு யாருக்கும் நேரமும் இருப்பதில்லை. இவ்வாறு இருந்தால் பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டம்தான்.
ஆகவே, முன்பைவிட நாம் இப்போது சாப்பிடும் உணவின் அளவு அதிகமாக உள்ளது. உணவுகளுக்கு இடையே நாம் டீ/காஃபி, நொறுக்குத் தீனிகளை எடுத்துக்கொள்கிறோம்.
உணவுமுறைகள் மாற்றத்தினால்தான் நீரிழிவு நோய் போன்ற வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படுகின்றன. அதுபோல இது பற்களுக்கும் ஆபத்து.
எனவே, தொடர்ந்து சாப்பிடுவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மூலமாக பல் சொத்தை ஏற்படுகிறது. ஒரு முறை பல் சொத்தை வந்துவிட்டால் அந்த இடத்தில் பாக்டீரியா தங்கிவிடும். நீங்கள் பிரஷ் கொண்டு தேய்த்தாலும் போகாது. அது பெரிதாகிக்கொண்டே போகும். அப்போது பற்களின் சொத்தையை அடைத்தல் அல்லது பல்லையே எடுத்தல் மட்டுமே தீர்வு.
இதையும் படிக்க | ஃபகத் ஃபாசில், ஆலியா பட்... இன்னும் பலர்! ஏடிஎச்டி என்பது என்ன? காரணங்களும் தீர்வுகளும்!
தரமான உணவு:
தற்போதைய அவசர உலகத்தில், மேற்கத்திய உணவுகள் அறிமுகமாகிவிட்டன. அதில் ஒன்றும் தவறு கிடையாது.
சமைக்க நேரமில்லை, வேகமாக தயார்செய்துவிடலாம் என்ற கோணத்தில் காலை ஒரு பிரட் சாண்ட்விச், ஓட்ஸ் என சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கு பாஸ்தா, நூடுல்ஸ் பிடிக்கிறது, அதைக் கொடுக்கிறோம்.
இப்போது இட்லி சாப்பிட்டால் வாய் கொப்புளிக்கும்போது வாயில் உள்ள உணவுத்துகள்கள் ஓரளவுபோய்விடும். ஆனால், திடமான சாண்ட்விச் சாப்பிட்டால் அது வாயில் பற்களில் ஒட்டிக்கொள்ளும். வாய் கொப்புளித்தாலும் அது போகாது.
அதனால் மேற்கத்திய உணவுகளை எடுத்துக்கொண்டால் மேற்கத்திய முறையில் வாய் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்க்க வேண்டும். மேற்கத்திய நாடுகளில் அதைத்தான் செய்கிறார்கள். அடுத்து மெக்கானிக்கல் டூத்பிரஷ் பயன்படுத்துகிறார்கள். நாமும் அதை பயன்படுத்த வேண்டும்.
அடுத்து 70-80% பேர் 'பிளாசிங்' என்ற முறையில் பற்களை சுத்தம் செய்கிறார்கள். இந்த முறை இந்தியாவில் இன்னும் பலருக்கு தெரியாது. இப்போதுதான் கேள்வியேபடுகிறோம். இதன் மூலமாக பற்களில் இடுக்குகளில் ஒட்டியிருக்கும் உணவுத்துகள்கள் நீக்கப்படுகிறது.
அடுத்ததாக அவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பல் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். இதையும் நாம் செய்யத் தொடங்கியாக வேண்டும்.
எனவே உணவின் தரம் மற்றும் அளவு, பல் சொத்தை வருவதைத் தீர்மானிக்கிறது
நேரம்:
நாம் சாப்பிடும் உணவு எந்தளவுக்கு வாயில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் அந்த நேரம்.
அதாவது சாப்பிட்டபின் வாயில் இருக்கும் உணவின் நேரத்தைக் குறைத்தாலே பல் சொத்தைக்கு வாய்ப்பிருக்காது.
இதற்கு சாப்பிட்டவுடனோ டீ/காஃபி, நொறுக்குத் தீனிகள் எடுத்துக்கொண்ட உடனேயோ வாய் கொப்புளிக்க வேண்டும். இதனால் பாக்டீரியாக்களுக்கு உணவு கிடைக்காது. அவை பற்களை அரிப்பது குறையும்.
பாக்டீரியா:
நம் உடலில் அனைத்து இடங்களிலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பாக்டீரியா இருக்கிறது. நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா என இரண்டும் இருக்கிறது. இவற்றில் நல்ல பாக்டீரியா வளர வாய்ப்பு கொடுக்கிறோமா, கெட்ட பாக்டீரியா வளர வாய்ப்பு கொடுக்கிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது.
உணவின் தரம் மற்றும் அளவு, வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் குறைத்தல் - இந்த இரண்டையும் செய்தாலே மூன்றாவது காரணியான கெட்ட பாக்டீரியாக்கள் குறைந்துவிடும்.
இதையும் படிக்க | பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!
மரபணுக்கள்:
மரபணுக்கள் என்பது நம் கையில் இல்லை. வீட்டில் முந்தைய தலைமுறைக்கு பல் சொத்தை இருந்திருந்தால், இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் நீங்கள் கவனமாக இருந்தாலும் மரபணு காரணமாக உங்களுக்கு பல் சொத்தை வரலாம்.
எனவே, முன்னெச்சரிக்கையாக இருந்தால் பல் சொத்தையை தவிர்க்கலாம்.
(கட்டுரையாளர் - பல் மருத்துவர் மற்றும் பல்வேர் மருத்துவயியல் துறை பேராசிரியர்)