திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்பாட்டுக்கு வந்த பெண்கள் கட்டணமில்லா கழிவறை!
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே, நகராட்சி சார்பில் பெண்களின் நலன் கருதி `கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்' புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும், மாதக்கணக்கில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே கிடந்தது. திருப்பத்தூருக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் பக்கத்து மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கழிவறை திறக்க தாமதம் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வேலை பார்த்துக் கொண்டு வரும் பெண்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிவறைக்கு எதிரே உள்ள கட்டணக் கழிவறைக்கு ரூ.10 செலுத்திச் செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இது குறித்து அங்குப் பயணம் மேற்கொண்டு வரும் பெண் ஒருவர் கூறுகையில், ``நான் பூ வியாபாரம் செய்து கொண்டு வருகிறேன். தினமும் பேருந்து நிலையத்திற்கு வந்து மார்க்கெட்டில் பூ வாங்கிக் கொண்டு ஊருக்குச் செல்வேன். அப்போது அவசரத்துக்குக்கூட கழிவறைக்குச் செல்ல முடியாமல் பலமுறை சிரமப்பட்டிருக்கிறேன்... அரசாங்கம் ஏழை எளிய மக்கள் பயன்படணும்னு தான் கட்டணமில்லா கழிவறை அமைச்சிருக்காங்க. அதனால அதைப் பயன்பாட்டுக்கு திறந்து வெச்சா ரொம்ப உதவியா இருக்கும்" என்றார்.
இது தொடர்பாக அங்கு இருக்கும் பொதுமக்களிடம் விசாரித்து, (15/12/2024) விகடன் தளத்தில், `கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பேசினோம். இந்த நிலையில் அதிகாரிகள், பொதுமக்கள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு கான்ட்ராக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கழிவறையை விரைந்து திறந்து வைத்துள்ளார்கள்.