இந்திய அணிக்கு திரும்புகிறாரா முகமது ஷமி? பெங்கால் அணியில் இருந்து விலகல்!
விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணியில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார்.
2024 - 2025 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனால், ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெங்கால் அணியில் இருந்து விலகிய முகமது ஷமி ஹைதராபாத்தில் நடைபெறும் தில்லிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி கோப்பையில் ஒரு போட்டியில் விளையாடிய ஷமி, சையத் முஷ்டாக் அலி தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். அவரது முழங்காலில் வீக்கம் இருப்பது மேலும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதனாலேயே அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.
இந்தாண்டு ரஞ்சி தொடரில் ஒரேயொரு ஆட்டத்தில் விளையாடிய முகமது ஷமி, 7 விக்கெட்டுகள் வீழ்த்தி மத்திய பிரதேச அணியை வீழ்த்த உதவினார். மேலும், அவர் இரண்டு இன்னிங்ஸ்களில் 40 ஓவர்களுக்கு மேல் பந்து வீசினார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடிய முகமது ஷமி, 9 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அவரது அதிரடியான பேட்டிங் சண்டீகருக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணி வெல்வதற்கு உதவியாக இருந்தது.
காயத்தால் இந்திய அணியில் இருந்து விலகியிருந்த முகமது ஷமி, பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் விளையாடாதது இந்திய அணிக்கு பெறும் பின்னடைவாக அமைந்தது. வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடிய ஆஸ்திரேலிய மண்ணில் முகமது ஷமி போன்ற வீரர் இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை. இருப்பினும், கடைசி இரண்டு போட்டிகளில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஷமி குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “ஷமி இல்லாமல் நாங்கள் விளையாடபோவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணியை சுதீப் தலைமை தாங்குகிறார். மெல்போர்ன் டெஸ்ட்க்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து கலட்டிவிடப்பட்ட முகேஷ் குமாரும் பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ளார்.
பெங்கால் அணி:
சுதீப் குமார் கராமி (கேப்டன்), முகமது ஷமி, அனுஸ்துப் மஜூம்தார், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சுதீப் சட்டர்ஜி, கரண் லால், ஷகிர் ஹபீப் காந்தி, சுமந்த குப்தா, சுபம் சாட்டர்ஜி, ரஞ்சோத் சிங் கைரா, பிரதீப்தா பிரமானிக், கௌசிக் மைதி, விகாஸ் சிங் , முகேஷ் குமார், சக்சம் சௌத்ரி, ரோஹித் குமார், முகமது கைஃப், சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், சயன் கோஷ், கனிஷ்க் சேத்.