அவுட்டான விரக்தியில் ஸ்டெம்பை உதைத்த கிளாசன்! 15% அபராதம்!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது அவுட்டான விரக்தியில் ஸ்டெம்பை உதைத்த கிளாசனுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 329 ரன்கள் குவித்து ஆல் - அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய பாபர் அசாம், முகமது ரிஸ்வான், கம்ரான் குலாம் அரைசதம் விளாசி அசத்தினர்.
பின்னர், இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி 43.1 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 97 ரன்களில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். இதனால், பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
சதம் அடிக்காமல் போன நிலையிலும், கடைசி 7 ஓவர்களில் இலக்கை எட்டமுடியாத விரக்தியில் விக்கெட்டை பறிகொடுத்த கிளாசன் ஸ்டெம்பை எட்டி உதைத்தார். இது அனைவரின் மத்தியிலும் சர்ச்சை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் உபகரணங்களை அவமதிப்பது கிரிக்கெட் விதிகளுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள், உடைகள், தரை உபகரணங்கள் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், ஐசிசி நடத்தை விதிகள் 2.2 ஐ மீறியதற்காகவும் அவரின் ஐசிசி ஒழுக்கப் புள்ளிகளில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.
ஹென்ரிச் கிளாசனுக்கு ஐசிசி நடத்தை விதிமுறைகள் லெவல் 1-ஐ மீறியதற்காக அவரது போட்டிக் கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.