வந்தே பாரத் விரைவு ரயில் திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் நிற்க நடவடிக்கை: மத்திய ரயில்வே அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை
வந்தே பாரத் விரைவு ரயில் திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சரிடம் எம்.பி. சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவிடம், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
மதுரை-பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயில் திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல், சென்னை சென்ட்ரல்- கோவை ரயில் ஜோலாா்பேட்டை சந்திப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்ரித் பாரத் திட்டத்தில் திருவண்ணாமலை, ஜோலாா்பேட்டை மற்றும் திருப்பத்தூா் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி மந்தமாக நடைபெறுகிறது. எனவே, இந்தப் பணிகளின் அவசியம் கருதி விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.