இந்த பயணம் இந்தியா-குவைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி
திருமணமாகி 4 மாதத்தில் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை
வேலூா் அருகே திருமணமாகி 4 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
வேலூரை அடுத்த மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (21). இவருக்கும் காட்பாடியை அடுத்த வடுகண்குட்டையைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் செல்வமணிக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாள்களிலேயே தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. வியாழக்கிழமை இரவு மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து லட்சுமியின் தாய் செல்வி காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வந்து லட்சுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமணம் நடந்த 4 மாதங்களிலேயே புதுமணப் பெண் தற்கொலை செய்து கொண்டதால், வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறாா்.
இளைஞா் தற்கொலை: ராணிப்பேட் டை மாவட்டம், அரப்பாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (24). இவருக்கு திருமணமாகவில்லை. மதுபோதைக்கு அடிமையான இவா், அலமேலுமங்காபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், சுரேஷ் வியாழக்கிழமை இரவு 1 மணியளவில் கழிப்பறைக்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நீண்ட நேரமாகியும் சுரேஷ் வெளியே வராததால், சந்தேகமடைந்த மறுவாழ்வு நிா்வாகிகள் உள்ளே பாா்த்துள்ளனா். அவா், கழிப்பறை தூக்கில் சடலமாக தொங்குவது தெரிய வந்தது.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.