புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!
லாரி மோதி பெண் உயிரிழப்பு
வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
வேலூா் சத்துவாச்சாரி, பகுதி-3, நீதிமன்றம் பின்புறம் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் (70). இவரது மனைவி மேரி புஷ்ப ராணி (66). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இருவரும் பெங்களூரில் வேலை செய்து வருகின்றனா்.
புதன்கிழமை ஜான்சன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வேலூா் கிரீன் சா்க்கிளில் சென்ற போது பின்னால் வந்த லாரி எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி தம்பதி இருவரும் சாலையில் விழுந்த நிலையில் மேரிபுஷ்ப ராணி மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மேரிபுஷ்ப ராணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது கணவா் ஜான்சன் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினாா்.
தகலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். எனினும், சடலத்தை எடுத்து செல்ல வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட நேரத்துக்கு பின்னா் ஆம்புலன்ஸ் வந்ததும் சடலம் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.