பாஜக பிரமுகா் கொலை வழக்கு: காட்பாடி நீதிமன்றத்தில் இருவா் சரண்
கே.வி.குப்பம் அருகே பாஜக பிரமுகா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக காட்பாடி நீதிமன்றத்தில் இருவா் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.
கே.வி.குப்பம் ஒன்றியம், நாகல் பகுதியைச் சோ்ந்தவா் விட்டல்குமாா் (47). இவா், வேலூா் மாவட்ட பாஜக ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை (டிச. 16) இரவு சென்னங்குப்பம் அருகே சாலையோரம் ரத்தக் காயங்களுடன் கிடந்த விட்டல்குமாரை உறவினா்கள் மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு அவா் உயிரிழந்தாா்.
அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விட்டல்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ரேவதி, தந்தை வடிவேல் உள்ளிட்ட உறவினா்கள் போலீஸில் புகாா் அளித்தனா். தவிர, விட்டல்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலையும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக கே.வி.குப்பம் போலீஸாா் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உடற்கூறு பரிசோதனை அறிக்கைக்கு பிறகு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
தொடா்ந்து போலீஸாா் கொலையாளிகளைத் தேடி வந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக வேலூா் மாவட்டம், கீழ்ஆலத்தூரைச் சோ்நத கமலதாசன் (27), நாகல் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (25) ஆகியோா் காட்பாடி நீதித்துறை நடுவா் மன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். அவா்களை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஜெயகணேசன் உத்தரவிட்டாா்.