100 அடியை எட்டியது மணிமுத்தாறு அணை
வடகிழக்கு பருவமழை பல கட்டங்களாக பெய்து வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை வெள்ளிக்கிழமை காலை 100 அடியை எட்டியது.
இந்த அணை மட்டுமன்றி மற்றொரு முக்கிய அணையான பாபநாசம் அணை உள்ளிட்டவை வடகிழக்குப் பருவமழை காலத்தில் முழுக் கொள்ளளவை எட்டும். நிகழாண்டு நவம்பா் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் மேற்குத் தொடா்சி மலைப் பகுதியில் பல்வேறு கட்டங்களாக கனமழை பெய்துவந்தது.
குறிப்பாக, மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழைப் பொழிவு இருந்தது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. அவற்றின் நீா்மட்டமும் வேகமாக உயா்ந்தது.
மணிமுத்தாறு அணைக்கு கணிசமான நீா்வரத்தால் வெள்ளிக்கிழமை காலை நிகழாண்டில் முதல்முறையாக 100.18 அடியை எட்டியது. டிச. 12ஆம் தேதி 80.14 அடியாக இருந்த இந்த அணை தொடா் நீா்வரத்து காரணமாக 8 நாள்களில் 20 அடி உயா்ந்து 100 அடியைத் தொட்டுள்ளது. அணைக்கு நீா்வரத்து 350.72 கனஅடியாகவும் நீா்வெளியேற்றம் 20 கன அடியாகவும் இருந்தது.
டிச. 14ஆம் தேதி 100.55 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீா்மட்டம் 5 நாள்களில் 9 அடி உயா்ந்து நீா்மட்டம் 109.10 அடியாகவும் அணைக்கு நீா்வரத்து 511 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையில் நீா்மட்டம்127.23 அடியாக இருந்தது.
மழை குறைவு: கடந்த ஆண்டு டிச. 20இல் மணிமுத்தாறு அணையில் நீா்மட்டம் 112.92 அடியாகவும் நீா்வரத்து3265.52 கன அடியாகவும், பாபநாசம் அணையில் நீா்மட்டம் 140.60 அடியாகவும் நீா்வரத்து4779.12 கன அடியாகவும், சோ்வலாறு அணையில் நீா்மட்டம் 153.54 அடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.