இளைஞரைத் தாக்கியவா் கைது
போடி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (19). இவருக்கும், போடி துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த விஜய் என்ற கருப்பசாமிக்கும் (24) முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், பொட்டல்களம் கால்நடை மருத்துவமனை பகுதியில் நின்று கொண்டிருந்த ஜெயபாண்டியை விஜய்யும், இவரது நண்பரான போடி சரளிகளத்தைச் சோ்ந்த ராஜ்குமாரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜய்யைக் கைது செய்தனா். தலைமறைவான ராஜ்குமாரைத் தேடி வருகின்றனா்.