Doctor Vikatan: 55 வயதிலும் தொடரும் பீரியட்ஸ்... சந்தோஷமா, சங்கடமா?
Doctor Vikatan: என் உறவுக்கார பெண்ணுக்கு 55 வயதாகிறது. இன்னும் பீரியட்ஸ் நிற்கவில்லை. 'நின்னாதான் பிரச்னை... மெனோபாஸ் கஷ்டங்களைத் தாங்க முடியாது. பீரியட்ஸ் வந்தா நல்லதுதான்' என்கிறார். இது சரியானதுதானா... 55 வயதிலும் பீரியட்ஸ் தொடர்வதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 50- 51. சில பெண்களுக்கு 55 வயது வரைகூட பீரியட்ஸ் வந்துகொண்டிருக்கும். அது நின்று போயிருக்காது. ரெகுலாகவோ, முறைதவறியோ பீரியட்ஸ் வந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகளும் விடுவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இத்தகைய பெண்களுக்கு மற்ற பெண்களைவிடவும் புற்றுநோய் தாக்கும் அபாயம் சற்று அதிகம். காரணம், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்.
ஒரு பெண் 12 வயதில் பூப்பெய்திருக்கலாம். 55 வயதாகியும் அந்தப் பெண்ணுக்கு பீரியட்ஸ் நிற்கவில்லை என்றால் அத்தனை வருடங்கள் அவரது உடல் ஈஸ்ட்ரோஜென் வெளிப்பாட்டுக்கு உள்ளாகியிருக்கும். இந்நிலையில் கர்ப்பப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயங்கள் இந்தப் பெண்களுக்கு அதிகரிக்கும். 50-51 வயதில் மெனோபாஸ் ஆனாலும், அதன் பிறகு திடீரென சிலருக்கு ப்ளீடிங் ஆகும். அது எண்டோமெட்ரியல் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். அதற்காக மெனோபாஸுக்கு பிறகு ப்ளீடிங் ஆனாலே அது கேன்சர் அறிகுறிதான் என்று பயப்படத் தேவையில்லை.
ஆனாலும், அது குறித்து உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். மற்ற புற்றுநோய்களைப் போல அல்லாமல், இந்தப் புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே உணரலாம், விழித்துக்கொள்ளலாம். மார்பகங்களை சுய பரிசோதனை செய்து, கட்டிகளோ, கசிவோ இருப்பது தெரிந்தால், அதற்குப் பிறகான புற்றுநோய் பரிசோதனையைச் செய்து பார்க்கலாம்.
ஈஸ்டரோஜென்னுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால்தான் மெனோபாஸுக்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி கொடுப்பது பற்றி நிறைய யோசித்தே மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள். 54- 55 வயதிலும் பீரியட்ஸ் வந்துகொண்டிருப்பதைப் பெருமையாக நினைக்கும் பெண்கள் பலர். பீரியட்ஸ் வந்துகொண்டிருப்பதால் மெனோபாஸ் அவதிகளில் இருந்து தப்பிக்கலாம் என்றும் நினைப்பார்கள். எனவே, 52 வயதுக்குப் பிறகும் பீரியட்ஸ் வந்தால், உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு நிகழ்கிறது என்று அர்த்தம். அதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவரை அணுகி, டி அண்ட் சி தேவையா என்பதையும் தெரிந்துகொண்டு செய்துகொள்ளலாம்.
மெனோபாஸ் வயது கடந்தும் பீரியட்ஸ் நிற்காதவர்கள், மருத்துவரை அணுகி, எண்டோமெட்ரியல் ஹைப்பர்ப்ளேசியா (Endometrial hyperplasia) எனப்படும் புற்றுநோய்க்கு முந்தைய நிலையா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்வது சிறப்பு. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை எளிதாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.