வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: மேலும் ஒருவா் கைது
தேனி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் மொத்தம் ரூ.72.25 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கூடலூரைச் சோ்ந்த பிரபு உள்ளிட்ட 5 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2022-ஆம் ஆண்டு மொத்தம் ரூ.72.25 லட்சம் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்ததாக கரூா் மாவட்டம், வெண்ணமலையைச் சோ்ந்த குமாா் (55), இவரது மனைவி பூமகள் (48), கோவை, நடுப்பாளையத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் மனைவி உஷாராணி, காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரம் அருகே உள்ள அருணாநகரைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கெளரிசங்கா், தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த சந்திரசேகரன் ஆகிய 5 போ் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் கடந்த டிச.12-ஆம் தேதி பூமகளை கைது செய்தனா். இந்த நிலையில், பூமகளின் கணவா் குமாரை (55) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி போலீஸாா் தேடி வருகின்றனா்.