10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேட புதிய முயற்சி!
சென்னை: `நல்ல காலம்... பிசினஸ் தொடங்குங்க' - ரூ.50 லட்சத்தை மோசடி செய்த ஜோதிடர் சிக்கியது எப்படி?
சென்னை வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் நகர் விரிவாக்கம், பவானி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி கவிதா. இவர், வேளச்சேரி காவல் நிலையத்தில் கடந்த 4.1.2024-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். நானும் என் கணவரும் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம்4. கடந்த மே மாதம் 2022-ம் தேதி நானும் என் கணவரும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரியில் குடியிருக்கும் ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரின் வீட்டுக்கு ஜாதகம் பார்க்கச் சென்றோம். அப்போது அவர் `உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு, நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம்' என்று கூறினார். மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவருக்கு பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு BPCL-ல் லைசென்ஸை கடந்த 2020-ம் ஆண்டு வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
அதன்பிறகு பிசினஸ் தொடர்பாக பேசிய ஜோதிடர் வெங்கட சுரேஷ், உங்களுக்கு சொந்தமாக இடம் இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள், ஆமாம், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூரில் 65 சென்ட் காலி இடம் உள்ளது என்று தெரிவித்தோம். உடனே அந்த இடத்தில் உங்களுக்கு பெட்ரோல் பங்க் தொடங்க பிபிசிஎல் லைசென்ஸை நான் வாங்கித் தருகிறேன் என ஜோதிடர் வெங்கட சுரேஷ் எங்களிடம் கூறினார். அதனால் நானும் என் கணவரும் ஆலோசித்து பெட்ரோல் பங்க் தொடங்க சம்மதம் தெரிவித்தோம்.
இதையடுத்து ஜோதிடர் வெங்கட சுரேஷ், எங்களுக்கு திருமுடிவாக்கத்தில் குடியிருக்கும் விஜய்பாஸ்கர் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது விஜயபாஸ்கரின் அப்பா டெல்லியில் உள்ள RAW என்ற மத்திய உளவுப்பிரிவில் வேலை செய்து வருகிறார். அதனால் அவருக்கு மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளுடன் பழக்கம் இருக்கிறது. அவரால் எளிதில் பெட்ரோல் பங்க் லைசென்ஸை வாங்கி தர முடியும் என ஜோதிடர் வெங்கட சுரேஷ் தெரிவித்தார். விஜயபாஸ்கரும் வெங்கட சுரேசும் அளித்த நம்பிக்கை அடிப்படையில் நாங்களும் பெட்ரோல் பங்க் தொடங்க முடிவு செய்தோம். இதையடுத்து பெட்ரோல் பங்க் லைசென்ஸ் பெற பலர் முயற்சி செய்கிறார்கள், அதனால் அந்த லைசென்ஸ் பெற 85 லட்சம் ரூபாய் வரை செலவாகும். எனவே அட்வான்ஸாக 50 லட்சம் ரூபாயை விஜயபாஸ்கரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வையுங்கள் என வெங்கடசுரேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து 29.8.2022-ம் தேதி முதல் 1.9.2022-ம் தேதி வரைக்கும் நானும் என் கணவரின் வங்கி கணக்குகளிலிருந்து 50 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தோம். ஆனால் லைசென்ஸ் வாங்கிக் கொடுக்காமல் விஜயபாஸ்கரும் வெங்கட சுரேசும் எங்களை ஏமாற்றி வந்தனர்.
விஜயபாஸ்கரின் வீட்டுக்குச் சென்று பணத்தை கேட்டபோது பணம் தர முடியாது உங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ளுங்கள் என்று அங்கிருந்த சிலர் எங்களை மிரட்டினார்கள். கடந்த ஓராண்டாக நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் விஜயபாஸ்கரும் வெங்கட சுரேசும் எங்களை அலைக்கழித்து வருகிறார்கள். எனவே ஆசைவார்த்தைகளைக் கூறி நம்ப வைத்து ஏமாற்றிய விஜயபாஸ்கர், வெங்கட சுரேஷ், மற்றும் கொலை மிரட்டல் விடுத்த கூலிப்படையினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதவன் பாலாஜி, மோசடி. கூட்டுசதி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர் வெங்கட சுரேஷ், விஜயபாஸ்கர் ஆகியோரை தேடி வந்தனர். ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 11 மாதங்களாக இருவரும் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோதிடர் வெங்கட சுரேஷ் தலைமறைவாக இருக்கும் இடம் வேளச்சேரி தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் விஜயபாஸ்கர், கூலிப்படையினரை போலீஸார் தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து வேளச்சேரி தனிப்படை போலீஸார் கூறுகையில், ``ஜோதிடர் வெங்கட சுரேஷ் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பிய ஐடி நிறுவன தம்பதிகளான கவிதாவும் மணிகண்டனும் விஜயபாஸ்கரின் வங்கி கணக்குக்கு 50 லட்சம் ரூபாயை பல தவனைகளாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதற்கான வங்கி பணபரிவர்த்தனை ஆதாரங்களை எங்களிடம் கொடுத்தனர். அதன்அடிப்படையில் வெங்கட சுரேஷ், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த அவர்களின் வீடுகளுக்குச் சென்றோம். ஆனால் இருவரும் அங்கு இல்லை. கடந்த 11 மாதங்களாக அவர்களைத் தேடிவந்த நிலையில் ஜோதிடர் வெங்கட சுரேஷ் மட்டும் சிக்கியிருக்கிறார். அவரிடம் விஜயபாஸ்கர் குறித்து விசாரித்து வருகிறோம். அவரும் கைது செய்யப்பட்டால்தான் அவரின் அப்பா மத்திய உளவுப்பிரிவில் வேலைப் பார்க்கிறாரா அல்லது அதுவும் பொய்யா என்ற தகவல்கள் தெரியவரும்" என்றனர்.