மேட்டூர் அனல்மின் நிலைய விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி!
சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் மற்றும் ஒப்பந்ததாரர் சார்பில் வழங்கப்பட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்ததில், அங்கு பணிபுரிந்து வந்த இரண்டு தொழிலாளர்கள் நிலக்கரி குவியலில் சிக்கி பலியாகினர்.
மேலும் அங்கு பணிபுரிந்து வந்த ஐந்து தொழிலாளர்கள் காயம் அடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனை மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் உடலுக்கு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பலியானோர் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 10 லட்ச ரூபாயும் அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் சார்பில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 17 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை உயிரிழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜேந்திரன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் இறுதி சடங்குக்காக உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
தொடர்ந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் நான்கு பேரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் வருவாய்த் துறையினர் திமுக நிர்வாகிகள் என ஏராளமான உடன் இருந்தனர்.