புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை
புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவையை துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டு வந்தது. விமானத்தில் போதிய பயணிகள் பயணிக்காததால் கடந்த மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 8 மாதங்களாக புதுவையில் இருந்து விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
இதையடுத்து, புதுச்சேரி அரசு மீண்டும் விமான சேவையை துவங்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக இண்டிகோ நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டு டிச.20ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை துவங்குவதாக அறிவித்தது.
அதன்படி, இன்று காலை 11.10 மணிக்கு பெங்களூரில் இருந்து 78 இருக்கைகள் கொண்ட இண்டிகோ சிறிய ரக விமானம் 74 பயணிகளுடன் புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. விமானம் தரையிறங்கிய போது, தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், விமானத்தில் வந்த பயணிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து 63 பயணிகளுடன் ஹைதராபாத்துக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமான சேவையை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், தலைமைச் செயலர் சரத் சௌகான், ஆளுநரின் செயலர் நெடுஞ்செழியன், சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே, சுற்றுலா துறை இயக்குநர் முரளிதரன், புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விமான சேவை தினமும் இருக்கும். பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12.25க்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர், மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். அதேபோல் ஹைதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 பெங்களூரு சென்றடையும்.
அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக கேஜரிவால் மனு: ஜன.30ல் விசாரணை!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் இருந்து தொடர்ந்து விமான சேவை செயல்பட வேண்டும் என்பதே எண்ணம். விமான நிலையம் விரிவாக்கப்பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கிறோம். தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு விமான நிலையம் அருகேயுள்ள தமிழக நிலங்களை கையகப்படுத்தி தர கேட்டு உள்ளோம். நாங்கள் தொடர்ந்து கேட்போம்.
விரிவாக்கப்பணி முடிந்தால் அதிக விமானங்கள் புதுச்சேரி வரும். இதையடுத்து மதுரை, தூத்துக்குடி, கொச்சி, கோழிக்கோடு பகுதிகளுக்கு புதுச்சேரியிலிருந்து விமான சேவை தொடங்க சாத்தியக்கூறு ஆராயப்படும் என்றார்.