IPL: "கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல கம்பீர் மட்டுமே காரணமல்ல..." - கம்பீர் குறித்து மனோஜ் திவாரி
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பயிற்சியாளராக கம்பீர் எதையும் செய்யவில்லை என்றும், அவருடைய பயிற்சியாளர் குழுவும் எதையும் செய்யவில்லை என்றும் மனோஜ் திவாரி சில விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
மனோஜ் திவாரியும், கவுதம் கம்பீரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். அவர் தலைமையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தது. பலரும் கம்பீருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கம்பீர் குறித்து பேசிய மனோஜ் திவாரி, " கொல்கத்தா அணி கோப்பையை வென்றதற்கு கம்பீரின் வழிகாட்டுதல் மட்டுமே காரணம் அல்ல. அணியில் காலிஸ், நரைன் மற்றும் நான் என எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.
ஆனால், வெற்றிக்கான பெயர் கிடைத்தது யாருக்கு?. வெற்றிக்கான எல்லா பெயரையும் கம்பீர் மட்டுமே எடுத்துக்கொள்ளும் வகையில் ஒரு PR சூழல் நிலவியது” என்று பேசியிருக்கிறார்.
மேலும், " நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பயிற்சியாளராக கம்பீர் எதையும் செய்யவில்லை. அவருடைய பயிற்சியாளர் குழுவும் எதையும் செய்யவில்லை" என்றும் விமர்சித்திருக்கிறார்.