WTC Finals: தோல்வி எதிரொலி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்த இந்தியா
பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 2-1 என தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருக்கிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பை இழந்திருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணிதான் ஒரு கட்டம் வரைக்கும் முதலிடத்தில் இருந்தது. ஆனால், உள்ளூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக இழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்தத் தோல்வியினால் பார்டர் கவாஸ்கர் தொடரை 4-0, 4-1 என்கிற அடிப்படையில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற நிலை இருந்தது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டை இந்திய அணி வென்று நம்பிக்கையும் அளித்தது. ஆனால், அதன்பிறகான போட்டிகளில் சொதப்பியது. சிட்னி டெஸ்ட்டுக்கு முன்பாக ஆஸ்திரேலியா 61.46 சதவிகித புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இந்திய அணி 52.78 சதவிகித புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தது. தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தைப் பிடித்து ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.
சிட்னி டெஸ்ட்டை இந்தியா வெல்லும்பட்சத்தில் ஆஸ்திரேலியா அடுத்ததாக இலங்கைக்கு எதிராக ஆடும் தொடரின் முடிவை பொறுத்து இந்தியாவுக்கான இறுதிப்போட்டி வாய்ப்புகள் அமைந்திருக்கும். ஆனால், இந்திய அணி இங்கேயே தோல்வியைத் தழுவிவிட்டதால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் இழந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணி 63.73 சதவிகித புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது.
கடந்த இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு எதிராகவும் ரோஹித் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஆடி இந்திய அணி தோல்வியைத் தழுவியிருந்தது. இந்த முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.