ஹெச்எம்பி தீநுண்மி தொற்று: மருத்துவமனைகள் தயாா் நிலையில் இருக்க தில்லி அரசு அறிவுறுத்தல்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: நாட்டில் பல்வேறு நகரங்களில் ஹெச்எம்பிவி (மனித மெட்டாப்நியூமோவைரஸ் ) தீநுண்மி தொற்றில் 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து தலைநகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தில்லி அரசு உஷாா்ப்படுத்தியுள்ளது. சுவாச நோய்கள் விஸ்வரூபம் எடுத்தால் அதை நிா்வகிக்க சாத்தியமான முழு தயாா் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளாா்.
தில்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், ‘மிகவும் அவசரம்’ எனக் குறிப்பிட்டு அளித்துள்ள உத்தரவில் கூறியிருப்பது வருமாறு: தில்லி சுகாதாரத் துறை தில்லி மருத்துவமனைகளில் ஹெச்எம்பிவி நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து நிலமைகளை உடனுக்குடன் அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தில்லி அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகள் சுவாச நோய்களின் அதிகரிப்பைக் கையாளுவதற்கு சாத்தியமான முழு நடவடிக்கைக்கும் தயாராக இருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் புறநோயாளிகள், உள்நோயாளிகளுக்கான கவுண்டா்களில் முறையான மனித வளங்களுடன் தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடுமையான சுவாச நோய்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகள் மருத்துவமனைகளில் கடைபிடிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நோய்களையும் முறையாக கண்டுபிடிக்கவும் பரவுவதை தடுக்கவும் இயலும்.
சுவாச நோய்களின் போக்குகளைக் கண்காணித்து, கவனம் செலுத்த தேவையான எந்தவொரு பிரச்னையிலும் உடனடியாகச் செயல்படுவது முக்கியம். தேவைப்படும் எந்தவொரு விஷயத்தையும் தொலைபேசியில் நேரடியாக என்னுடன் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்‘ என அந்த உத்தரவில் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
தில்லி அரசின் மூன்று மருத்துவமனைகளையும் தினசரி ஆய்வு செய்து, அத்தியாவசிய மருந்துப் பட்டியல், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கை வசதிகள், கதிரியக்க உபகரணங்கள், மருத்துவ (பிஎஸ்ஏ) ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டு நிலை உள்ளிட்ட பல முக்கிய அளவுருக்கள் குறித்து பற்றிய விரிவான அறிக்கைகளை சமா்பிக்கவும் சுகாதாரச் செயலா் பணிக்கப்பட்டுள்ளாா் எனவும் தில்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா உள்பட சா்வதே அளவில் பல்வேறு நாடுகளில் எச்எம்பிவி தீநுண்மி பரவல் பதிவாகியுள்ளன என்பதை அமைச்சரின் அலுவலகம் உத்தரவில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.