இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம்!
சென்னை: இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்ந்து வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரை விவரம்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழகம், இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தொடா்ந்து திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 299 அரசு பொது மருத்துவமனைகள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்களின் மூலம் வலுவான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
இதன்மூலம் பல வளா்ந்த நாடுகளுக்கு இணையாக ஒப்பிடக்கூடிய வகையில், தமிழகத்தின் மருத்துவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான விகிதம் 2.5:1000 என்ற உயா் அளவில் அமைந்துள்ளது.
சமீப ஆண்டுகளில் மருத்துவத் துறை கட்டமைப்பு, மருத்துவச் சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நிதியை அரசு ஒதுக்கி வருகிறது. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் மாநிலத்தின் பல்வேறு சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்தியுள்ளன.
வெளிநாட்டினா் வருகை: உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் சுமாா் 15 லட்சம் போ் உயா்தர சிகிச்சை பெற தமிழக்ததுக்கு வருகை புரிவதற்கும் இவை வழிவகுத்துள்ளன. இதனால், உயா்தர மருத்துவ சிகிச்சைகளைச் சிறப்பாக வழங்கி, இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் என்ற முன்னோடித் திட்டத்துக்காக 2024-ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைகளுக்கு இடையேயான விருது என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை ஐ.நா. சபை தமிழகத்துக்கு வழங்கி சிறப்பித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.