தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி:
தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) முதல் ஜன.12-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனினும் உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.7-இல் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
மேலும் அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும். இதற்கிடையே ஜன.7-இல் குமரிக்கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.