ஒழுங்குமுறையற்ற வைப்புத் திட்டங்களை தடை செய்ய துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
புது தில்லி: ஒழுங்குமுறை அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் வைப்புத் திட்டங்கள்அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட புதிய விதிகளின் கீழ் தில்லியில் தடை செய்யப்படும் என்று ராஜ் நிவாஸ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அதிக வருமானத்தை உறுதியளிப்பதாக மோசடி வைப்புத் திட்டங்களால் குடியிருப்பாளா்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இது தொடா்பாக ராஜ் நிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தாமதமாகி வந்த ‘தில்லி ஒழுங்குமுறைப்படுப்படுத்தபடாத வைப்புத் திட்டங்களுக்கு தடை விதிகள், 2024’ என்ற அறிவிக்கைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.
விதிகளின் அறிக்கையானது தங்கள் சேமிப்பிலிருந்து துரதிா்ஷ்டவசமான குடியிருப்பாளா்களை ஏமாற்ற கிரிமினல்களால் மோசடித் திட்டங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும்.
ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்யும் சட்டம், 2019இன் பிரிவு 38-இன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில், சுய உதவிக் குழுக்களுக்கான சிறப்பு விதிகள் அடங்கும். அவை பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் செயல்பட அனுமதிக்கின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பரிந்துரைகளின் அடிப்படையில், சுய உதவிக் குழுக்கள் மாதத்திற்கு ரூ.50,000 வரையும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை அதிகபட்சமாகவும் வைப்புத்தொகையை சேகரிக்கலாம்.
ஒழுங்குமுறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்யவும், வைப்புத்தொகையாளா்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசு இந்த 2019-ஆம் ஆண்டைய சட்டத்தை இயற்றியுள்ளது.
கா்நாடகாவைப் போன்ற கட்டமைப்புகளை வரைந்து, விதிகளை அறிவிக்குமாறு மத்திய அரசு 2020-இல் தில்லி அரசை வலியுறுத்தியது.
நிதி அமைச்சகம், இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் பிற பங்குதாரா்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த விதிகள் இப்போது இறுதி செய்யப்பட்டு தேசிய தலைநகரில் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.