பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
BB Tamil 8 Day 90: ‘முத்து… நீங்க பண்ற வேலையா இது?’ - விசே காட்டம்; மற்றொரு எவிக்சன்
இந்த எபிசோடில் வெளியேற்றப்பட்ட ராணவ்வை, சவுந்தர்யாவின் ‘ஃபீமேல் வெர்ஷன்’ எனலாம். ‘கேமிற்காக செய்கிறேன்’ என்று பாவனை செய்தாலும் மேடைக்கு வந்த போது வீட்டிற்குள் இருந்த ராணவ்வைத்தான் பார்க்க முடிந்தது.
ராணவ்வை மந்த புத்திக்காரர் என்று சமயங்களில் நினைத்தாலும் அதுவும் ஓர் இயல்புதானே? அனைவருமே முத்து போல புத்திசாலிகளாக இருந்து விட்டால் உலகம் சுவாரசியமாக இருக்காது. ஒரு குழந்தை துறுதுறுவென்று ஓடிக் கொண்டிருக்கும் போதுதானே ஒரு வீடு உயிர் பெறுகிறது?! தனக்குள் இருக்கும் சிறுவனை ஒவ்வொருவரும் தொலைத்து விடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் ராணவ் மூலம் நாம் கற்க வேண்டிய பாடம் என்று தோன்றுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 90
‘மஞ்ச கலர் சிங்குச்சா’ என்கிற மாதிரி மஞ்சள் நிற கோட், சூட்டில் மங்கலகரமாக வந்தார் விஜய்சேதுபதி. “போட்டி உள்ளே வரப்ப ஒரு பதட்டம் இருக்கும். அப்புறம் அது பழகி, ஃபைனல் வரப்ப இன்னொரு பதட்டம் ஆரம்பிச்சிடும். அந்த மாதிரி நிலைமைலதான் போட்டியாளர்கள் இருக்கிறார்களா? வாங்க விசாரிப்போம்’ என்றபடி வீட்டுக்குள் சென்றார்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ஒரு காலக்கட்டத்தின் தமிழக அரசியலில் ‘பன்னீருக்கும்’ சர்ச்சைகளுக்கும் நெருக்கமான தொடர்பிருந்தது. அதே போல பிக் பாஸ் வீட்டில் இப்போது ‘பன்னீர்’ தொடர்பான ஒரு பிரச்சினை. காலையில் சாப்பிட வந்த பவித்ராவும் ராணவ்வும் பன்னீர் மசாலாவை ‘first come first served’ முறையில் எடுத்துக் கொண்டார்கள். அதற்கு கிச்சன் இன்சார்ஜ் சவுந்தர்யாவின் அனுமதியையும் வாங்கிக் கொண்டார்கள். ஆச்சா..?
உடற்பயிற்சியை முடித்து விட்டு பசியுடன் வந்த முத்துவிற்கு பன்னீர் இல்லை. முந்தைய இரவும் இதே போல் அவருக்கு ஒரு பிரச்சினை நேர்ந்தது போல. எனவே இன்சார்ஜ் சவுண்டை அழைத்து ‘என்னதிது.. ஒரு உணவுப்பொருளை சமமாக பகிர்ந்து தர வேண்டிய பொறுப்பு உங்களுடையதுதானே? உங்கள் கடமையில் இருந்து மீறி விட்டீர்கள். நான் பசியோடு இருக்கிறேன். அப்போதுதான் அடுத்த முறை இது உங்களுக்கு மறக்காமல் இருக்கும்” என்று சொல்லி விட்டு மீண்டும் ‘வேகு.. வேகு..’ என்று உடற்பயிற்சி செய்து தன் கோபத்தைத் தணிப்பதற்காக சென்று விட்டார்.
“சைவ உணவுப்பழக்கமுள்ளவர்களுக்காக எடுத்து வைக்கப்படும் உணவை, நான்-வெஜ் சாப்பிடுபவர்கள் தவிர்க்கலாம். சிறுபான்மை சமூகத்தை எப்போதுமே மறக்கக்கூடாது’ என்கிற சமூக விழிப்புணர்வு செய்தியையும் இதில் கலந்ததுதான் முத்துவின் திறமை. சண்டை போட்டாலாவது சவுந்தர்யாவின் மனது ஆறியிருக்கும்.
ஒருவன் பசியோடு விலகிப் போனால் அதை விடவும் மனதை வேதனைப்படுத்தும் விஷயம் இன்னொன்றிருக்குமா? எனவே “பசிக்கறவங்க சாப்பிடட்டும்ன்னு நெனச்சேன். இது தப்பா?” என்று வாய்ஸை உயர்த்த “ஹலோ.. தப்பும் பண்ணிட்டு சத்தமும் போடாத. இதை நீதான் பிரிச்சு வெச்சிருக்கணும். அதுக்குத்தான் இன்சார்ஜ்” என்று முத்து அழுத்தமாக வாதிடவே கண்ணீரோடு விலகிச் சென்றார் சவுந்தர்யா.
பன்னீருக்காக ஒரு பஞ்சாயத்து
சவுந்தர்யாவை கிச்சன் இன்சார்ஜாக போடும் போதே அதற்கு பலமாக ஆட்சேபம் தெரிவித்தவர் முத்து. “இது சாப்பாட்டு விஷயம். பழகாதவர்கள் இதில் வேண்டாம்” என்றார். “தப்பு பண்ணா கேளுங்க”என்று சொல்லி பொறுப்பை ஏற்றுக் கொண்ட சவுந்தர்யா, உணவுப்பங்கீடு விஷயத்தில் கவனமாக இருந்திருக்கலாம்.
“இப்படித்தான் நெறய விஷயங்கள்ல நடந்தது” என்று விஷால், ஜாக்குலின் போன்றவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து உணவுப்பொருள் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று தெரிகிறது. “பசியோட வர்றவங்க சாப்பிடட்டும்னா.. நானும்தானே இப்ப பசியோடு வரேன். அதுக்கு பதில் என்ன?” என்று கேட்கும் முத்துவிற்கு சவுண்டிடம் பதில் இல்லை. வெறும் கண்ணீர்தான். அதை வைத்து பசிறாற முடியாதுதானே?!
வீட்டுக்குள் வந்த விசே, ‘ரயான் தவிர எல்லோரும் உக்காருங்க’ என்று சொன்னதற்கு காரணம் பச்சைக்கலர். ‘வடிவேலு ஒரு படத்துல வருவாரு தெரியுமா?’ என்று சிரித்துக் கொண்டே விசே ஆரம்பிக்க “அதை ஏன் தம்பி கேக்கறீங்க. மனசெல்லாம் புண்ணா இருக்கு” என்கிற மாதிரி ரயான் ஃபீலிங்க்ஸ் தர, பிளேட்டை மாற்றிப் போட்ட விசே ‘வடிவேலு எவ்வளவு பெரிய லெஜண்ட் தெரியுமா.. அவர் கூட உங்களைக் கம்ப்போ் பண்ணா ஏன் காண்டாவுறீங்க?” என்றதற்குப் பெயர் ‘உருட்டு’.
TTF டாஸ்க்கில் விளையாடிய அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்த விசே, ரத்தக்காயம், ரணக்காயமான விஷால், அருண், ரயான் ஆகியோரை தனியாக விசாரித்தார். நண்பனுக்காக உருகிய அருணின் சென்டிமென்ட் கதையைக் கேட்டார். ராணவ் எழுந்த போது பலத்த கைத்தட்டல் அழ ‘கியாரே.. செட்டிங்கா?’ என்று கிண்டடிலத்தார் விசே. “அப்படில்லாம் இல்லை சார்” என்று ராணவ் தயங்கிச் சிரிக்க “நான் உங்களை நம்பவே போறதில்லை. அப்புறம் ஏன் ப்ரூவ் பண்ண டிரை பண்றீங்க?” என்று கலாய்த்த விசே ‘என்ன சவுந்தர்யா.. ராணவ்விற்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்கறது எவ்வளவு கஷ்டம்?” என்று கேட்க அந்தக் கேள்வியே சவுந்தர்யாவிற்குப் புரியாதது நல்ல காமெடி.
“காது சரியா கேக்கலை” என்று சமாளித்த சவுண்டு, (சவுண்டா பேசுங்க சார்!) “எனக்கே ஒரு விஷயம் புரியறது கஷ்டம். இவன் என்ன விடவும் மோசம்” என்று சொல்ல விசே வாய் விட்டு சிரித்து விட்டார். “என்ன ரயான்.. ஃபயர் மோடிற்கு வந்துட்டீங்க போல. இந்த நெருப்பை இத்தனை நாள் எங்க ஒளிச்சு வெச்சிருந்தீங்க?” என்று கேட்டது சரியான கேள்வி. அதுவரை ‘சாக்லேட் பாயாக’ பெண்கள் ஏரியாவிலேயே சுற்றிக் கொண்டிருந்த ரயான், திடீரென ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பது ஸ்வீட் சர்ப்ரைஸ்.
“யாருக்கு டிக்கெட் கிடைக்கக்கூடாது?” - வில்லங்கமான கேள்வி
“யாருக்கு TTF கிடைச்சிருக்கக்கூடாதுன்னு நெனச்சீங்க?” என்று வில்லங்கமான பகுதிக்கு அடுத்து நகர்ந்தார் விசே. “ரயானுக்கு கிடைக்கக்கூடாதுன்னு நெனச்சேன்” என்று முத்து சொன்னது எதிர்பார்த்ததே. தான்தான் ஃபர்ஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒருவன் வேகமாக ஓடினால் அவனைத்தான் எதிரியாக நினைக்கத் தோன்றும். ஆனால் முத்துவிற்கு மஞ்சரி அல்லது ஜாக் வந்தால் ஓகேவாம்.
ராணவ்வின் பெயரைச் சொன்னார் மஞ்சரி. “என் நண்பன் விஷால் ஜெயிக்கணும்னு நெனச்சேன்” என்று ராணவ் சொல்ல “அதை அவரே நம்ப மாட்டார்” என்று பங்கம் செய்தார் விசே. அருண் சொன்ன பதிலால் அதிருப்தியடைந்த விசே. “நான் ராணவ் கிட்ட இருந்து பேச ஆரம்பிச்சிருக்கக்கூடாது. அதான் எல்லோரும் அந்த மோட்ல இருக்கீங்க. நான் கேட்டது புரியலையா?” என்று வழக்கம் போல் கடுப்பைக் காட்ட பம்மி அமர்ந்தார் அருண்.
ஒரே வாக்கியத்தில் நறுக்கென்று பதில் சொன்னால்தான் விசேவிற்குப் பிடிக்கிறது என்பதை கற்றுணர்ந்தவர்கள் தீபக், மஞ்சரி போன்றவர்கள். சற்று நீட்டி முழக்கினாலும் முத்து சொல்வது சுவாரசியமாக இருக்கிறது என்பதால் விசே சகித்துக் கொள்ளவார். மற்றபடி வியாக்கியானத்தோடு நீட்டி முழக்கிச் சொன்னால் அவருக்குப் பிடிப்பதில்லை. ‘கட்டிப்பிடி வைத்தியம்’ மாதிரி ‘உக்காருங்க’ வைத்தியத்தைப் பார்த்து விடுகிறார்.
“முத்து எப்படியும் ஃபைனல் போயிடுவாரு. மக்கள் ஓட்டு போடுவாங்க அவருக்கெதுக்கு டிக்கெட்?” என்று பவித்ரா சொன்னது ஒருவகையில் நியாயமே. “ஏம்மா..” என்பது மாதிரி தலையில் அடித்துக் கொண்டார் முத்து. “ஜெயிக்காமயே ஓட்டு கேக்கறான். ஆடாம ஜெயிச்சோமடா’ பாட்டு மாதிரி” என்று ராணவ்வை சொன்னார் சவுந்தர்யா.
விசே பிரேக் விட்டுச் சென்றதும் “என்ன சவுந்தர்யா. அப்படிச் சொல்லிட்டே. நான் என்னமோ எல்லோர் கிட்டயும் போய் பாயிண்ட்ஸ் கேட்ட மாதிரி சொல்ற. டாஸ்க் அப்படித்தானே இருந்துச்சு?” என்று ராணவ் ஆட்சேபித்தது சரியான கேள்வி. ஆனால் “எனக்கு தோணிச்சு. என்ன இப்ப. உனக்கு புரியலைன்னா அது என் பிரச்சினை கிடையாது” என்கிற வழக்கமான ஆயுதத்தின் மூலம் ராணவ்வின் வாயை அடைத்தார் சவுண்டு. ராணவ் என்றாலே அவரை எளிதாக வாயடைக்கச் செய்யலாம் என்கிற மாதிரிதான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.
முத்துவிற்கு ஆதரவு தந்த விசே
மேடைக்கு வந்த விசே ‘மக்களே கருத்து இருக்கா?” என்று கேட்க, “கூட்டணி வைக்கறது பிடிக்கலை” என்று ஒருவர் சொல்ல “ஓட்டு போடும் போது என்ன பண்ணீங்க?” என்று கேட்டு தனக்கும் அரசியல் பன்ச் வரும் என்று நிரூபித்தார் விசே. தன் பள்ளிக்கூட மாணவனை கூட்டத்தில் பார்த்து “டேய் நல்லவனே.. நீயாடா. எப்ப வந்தே..?” என்று அவரையும் குடும்பத்தாரையும் தன் பிரத்யேக பாணியில் விசே விசாரித்தது சுவாரசியமான காட்சி. விசே நண்பராக இருந்தாலும் சிறப்பு சலுகையில் வராமல் பார்வையாளராக வந்தவரையும் பாராட்ட வேண்டும்.
“இந்த முத்து இருக்கிறாரே.. பிக் பாஸிற்கே டஃப் பைட் கொடுக்கறாரு. இவரே ரூல்ஸ் போடறாரு. கூட்டணி அமைக்கறாரு” என்று ஒருவர் புகார் சொல்ல “இல்லம்மா.. பிக் பாஸ் ஒரு ஐடியாதான் தர முடியும். அதை டெவலப் பண்ண வேண்டியது போட்டியாளர்களோட வேலை. முத்துதான் பெரும்பாலும் ஏதாவது ஒரு ஐடியாவைக் கொண்டு வராரு. அது தப்புன்னா பிக் பாஸ் கேட்பாரு” என்று முத்துவின் ஆர்வத்திற்கு நல்லவிதமான சான்றிதழ் தந்தார் விசே. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். “தப்புன்னா பிக் பாஸ் சொல்லியருப்பார்” - இந்தப் பாயிண்ட் பின்னாடி உபயோகப்படவிருக்கிறது)
உள்ளே சென்ற விசே “இந்த கூட்டணிலாம் வெச்சீங்க இல்லையா.. அதை பத்தி பேசலாமா?” என்று ஆரம்பிக்க கூட்டணியின் ஆரம்பகர்த்தாவான ஜாக் பேச ஆரம்பித்தார். “ரயான் ஸ்பீடா எல்லோரையும் அவுட் பண்ணார். அவரை தடுத்து நிறுத்துவதற்காக பவித்ராவோட டீல் போட்டேன்” என்றார். “டீல் போடறேன்னு சொல்லிட்டு என்னை டீல்ல விட்டுட்டான் இந்த முத்து” என்று மஞ்சரி பிராது வைக்க அந்தப் பொறியில் சரியாக சிக்கிக் கொண்டார் முத்து.
முத்துவை ரோஸ்ட் செய்த விசே
முத்து என்னென்னமோ சொல்லி சமாளிக்க ‘நியாயமாப் பேசணும். ஏன் மஞ்சரியை சேர்த்துக்கலை?”என்கிற கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டார் விசே. “எனக்கு தோணிச்சு” என்று சவுந்தர்யாவின் பாணியில் முத்து இறுதியில் விடையளிக்க “என்ன முத்து.. பதட்டமா இருக்கா.. தப்புதான்ன்னு சொல்லி முதல்ல சரண்டர் ஆகியிருக்கலாம்ல. ஏன் சுத்தறீங்க?” என்று விசே கேட்க, பாக்கியராஜ் முழியில் திகைத்து நின்றார் முத்து.
டிரம் மாட்டிய டாஸ்க்கில் ‘தனியாக ஆடி முடிக்க முடியாது’ என்கிற காரணத்தினால் கூட்டணி அமைத்து ஆடும் ஐடியாவைச் சொன்ன அருண் எழுந்து நிலைமையை விளக்கினார். “பாயிண்ட் இல்லாதவங்க சேர்ந்து முதல்ல ரயானை அடிக்கலாம்ன்னு முத்து சொன்னாரு. சரியிலைன்னு தோணிச்சு. இருந்தாலும் தீபக் - பவித்ரா கூட்டணில சேர வேண்டியதான் போச்சு” என்றார் மஞ்சரி. “கூட்டணி வெச்சு ஒருத்தரை டார்கெட் பண்றது சரியில்லைன்னு தோணுச்சு. அதனால அப்புறமா விலகிட்டேன்” என்று பவித்ரா சொன்னது நேர்மை. இந்த விஷயம்தான் இப்போது அவரை வலுவாக காப்பாற்றியது.
இந்த டாப்பிக்கிலும் முத்து தொக்காக மாட்டிக் கொண்டார். “அருணும் விஷாலும் விழுந்துட்டாங்க. ஆட்டத்தை நிறுத்துங்கன்னு சொன்னேன். ஆனா அதுக்குள்ள பவித்ரா என்னோட புகைப்படத்தைப் பிச்சுட்டாங்க” என்று முத்து சொல்ல “நீங்க சொல்லுங்க பவித்ரா” என்று சட்சட்டென்று ஆட்களை மாற்றி மாற்றி குறுக்கு விசாரணையில் ஈடுபட்டார் விசே. “ஹோல்ட்ன்னு முத்து சொன்னது என் காதுல விழலை” என்று பவித்ரா சொல்ல அருணும் விஷாலும் கீழே விழுவதற்கு முன்பே இந்தச் சம்பவம் நடைபெற்றதை சாட்சியங்களின் மூலம் நிரூபித்தார் விசே. (இப்பவாவது குறும்படம் போடக்கூடாதா பாஸ்?!).
பவித்ரா பிய்த்துப் போட்ட புகைப்படத் துண்டுகளை முத்து தானாக எடுத்துக் கொண்ட விஷயம் இப்போதுதான் நமக்குத் தெரிய வந்தது. கூட விளையாடிய பெரும்பாலான போட்டியாளர்களுக்கு கூட இந்த விஷயம் இதுவரை தெரியவில்லை.
‘முத்து …நீங்க பண்ற வேலையா இது?’ - விசே காட்டம்
‘நியாயமா இது.. தர்மமா இது.. அறமா இது?” என்கிற மாதிரி வரிசையாக விசே கேட்க, ‘நம்ம பாயிண்டை சொன்னாலும் பிரச்சினை. எப்படியும் ஒத்துக்க மாட்டாரு. இவரை எதிர்த்துப் பேசவும்முடியாது.. டென்ஷன் ஆயிடுவாரு. பேசாம சரண்டர் ஆகிடுவோம்’ என்கிற மோடிற்கு நகர்ந்த முத்து “அதுவும் இதுவும் ஏறத்தாழ ஒரே நேரத்துல நடந்தது’ என்று சொல்லிப் பார்த்தாலும் அது எடுபடவில்லை. எனவே ‘தப்புத்தேன்.. அந்தக் காட்டுமிராண்டி கூட்டத்துல நானும் ஒரு பயதேன்” என்கிற மாதிரி சரண் அடைந்தார். “ஆட்டத்துல விளையாடற நீங்களா எப்படி ஒரு விஷயத்தை முடிவு பண்ணலாம்.. நீங்க என்ன ரெஃப்ரியா?” என்றெல்லாம் முத்துவை இறங்கி அடித்தார் விசே.
“தப்புன்னா பிக் பாஸ் சொல்லியிருப்பாரு” என்று சற்று முன்னர்தான் முத்துவிற்காக வாதாடினார் விசே. இப்போது எதிர்தரப்பு வழக்கறிஞராக மாறி விட்டார். முத்து தானாக முடிவு செய்து ஒட்டிக் கொண்டது நிச்சயம் தவறு. ஆட்டம் நின்ற நிலையில் பவித்ரா பிய்த்து விட்டார். எனவே ஒட்டிக் கொண்டேன்’ என்று ஆட்ட மும்முரத்தில் முத்து செய்திருந்தாலும் பிக் பாஸ் தலையிட்டு இதைக் கண்டித்திருக்க வேண்டும். வீக்கெண்ட் கன்டென்ட்டிற்காக இந்த விஷயத்தை அப்போதைக்கு விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.
“முத்து.. நீங்க எவ்வளவு தெளிவான ஆளு. ஒரு டாஸ்க்கையே பலவிதமா யோசிச்சு பிரிச்சு மேயற ஆளு. உங்களுக்கு தெரியலைன்னு சொன்னா, அது நம்பறா மாதிரியா இருக்கு?’ என்று விசே வறுத்தெடுக்க குனிந்த தலை நிமிராமல் பரிதாபமாக நின்றார் முத்து.
வெளியேற்றப்பட்ட ராணவ்
பிரேக் முடிந்து திரும்பிய விசே ‘அடுத்து என்ன மேட்டர் தெரியுமா?” என்று கோட்டிலிருந்து கார்டை உருவ ‘இன்னிக்கேவா?” என்று வாயைப் பிளந்தார் சவுந்தர்யா. “வீட்ல சாப்பாடு பிரச்சினைல்ல. ஆள் குறைஞ்சாதானே.. சரியாகும்?” என்று சர்காஸம் செய்த விசே, “நீங்கதான் லிஸ்ட்ல இல்லையே.. ஏன் சோகம்?” என்று சவுந்தர்யாவை விசாரித்தார்.
‘யார் போகணும்?’ என்கிற கேள்வியை மாற்றி ‘யார் போகக்கூடாது?’ என்று விசே கேட்க, அவரவர்களுக்குப் பிரியமானவர்களை சொன்னார்கள். அருண் மட்டுமே ராணவ்வை சேர்த்துக் கொண்டார். சஸ்பென்ஸை உடைத்த விசே ராணவ் பெயர் போட்ட கார்டை எடுத்து நீட்ட சந்தோஷமாக கைதட்டினார் சவுந்தர்யா.
“ராணவ் வெளிய வராரு. அவரோட ஆதரவாளர்கள் இருந்தா பேசுங்க. சந்தோஷப்படுவாரு” என்று பார்வையாளர்களிடம் விசே சொல்ல, கண்ணீரோடு ஒருவர் எழுந்து நமக்கு அதிர்ச்சியளித்தார். “ஹலோ கய்ஸ்.. இந்த நிகழ்ச்சி மூலமா வெளில தெரியணும்ன்னு நெனச்சேன். அது நடந்துச்சு.. பை..சீ யூ.. டாட்டா’ என்றபடி கிளம்ப “நீயொரு யுனிக் பிளேயர்”என்று பாராட்டினார் அருண். “ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க பிக் பாஸ்’ என்று அவரிடம் வம்படியாக வாழ்த்து வாங்கி எல்லோரிடமும் விடைபெற்று சென்றார் ராணவ்.
‘TTF வின்னர் பத்தி நாளைக்குச் சொல்றேன்’
மேடைக்கு ராணவ் வந்ததும் உற்சாகக்கூச்சல் கேட்டது. ஒரு இளைஞனும் சிறுமியும் ராணவ்வைப் பார்ப்பதற்காகவே பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகச் சொல்லவும் ‘ஹே.. என்னப்பா இது.. இப்படில்லாம் எனக்கு நடந்ததே இல்ல’ என்று ராணவ் ஆச்சரியடைய “இனிமே இப்படித்தான் நாயக்கரே” என்கிற மாதிரி அவரைப் பாராட்டினார் விசே. ராணவ்வின் ஃபேர்வெல் வீடியோ ஒளிபரப்பானதும் “எப்படி சார் இருக்கேன்.. நீங்க சொல்லுங்க” என்று விசேவிடம் கேட்டது வெகுளித்தனமாக இருந்தது. “மக்கள் சொல்லுவாங்க” என்ற விசே பிறகு “லட்சணமா இருந்தீங்க.. என்னவொன்னு தப்புன்னா சொன்னா ஏத்துக்கங்க” என்று சொல்லி விட்டு “நீயா ஏத்துக்குவே. போய்யா யோவ்’ என்பது மாதிரி கலாய்த்தது சுவாரசியம்.
வீட்டுக்குள் சென்ற ராணவ், அருண் ப்ரோவை சகோதரனாக உணர்ந்த நெகிழ்ச்சி முதற்கொண்டு பல விஷயங்களைப் பகிர்ந்தார். “இவன் போனது சந்தோஷம்தான்” என்று பாராட்டும் நிம்மதியும் கலந்து சொன்னார் சவுந்தர்யா. என்னதான் ராணவ் இம்சை தருபவர் என்றாலும் அனைவரின் மனங்களிலும் கொஞ்ஞூண்டு பிரியம் இருப்பதை இந்தச் சமயத்தில் உணர முடிந்தது.
ராணவ்வை வழியனுப்பிய விசே. ‘ஓகே.. நானும் கிளம்பறேன். பை” என்று பையைத் தூக்க “சார்.. சார்.. டிக்கெட் யாருக்கு?” என்று அனைவரும் கோரஸாக விண்ணப்பிக்க “அது நாளைக்கு” என்றபடி டாட்டா காட்டினார் விசே.
இதெல்லாம் சரி. டபுள் எவிக்ஷனில் மஞ்சரியும் இருக்கிறாராமே? ஷாக்கிங் நியூஸ். உண்மையா இல்லையா என்பது இன்று தெரிந்து விடும்.