செய்திகள் :

BB Tamil Day 91: `அழ வேணாம்ன்னு இருக்கேன்; அழ வெச்சிடாத!' - வெளியேறிய மஞ்சரி, அடுத்தது யார்?

post image
‘கூட்டிக் கழிச்சுப் பாரு. கணக்கு சரியா வரும்’ என்பது ‘அண்ணாமலை’ படத்தில் அடிக்கடி வரும் வசனம். ஆனால் பிக் பாஸ் வீட்டின் கணக்கு எப்படிப் போட்டாலும் சரியாக வராது. அப்படியொரு விசித்திரமான அக்கவுன்ட்டிங் சாஃப்ட்வேரைக் கொண்டது. இல்லையென்றால் மஞ்சரி போன்ற ஸ்ட்ராங்கான பிளேயரை வெளியே அனுப்பி வைப்பார்களா? இது உண்மையிலேயே மக்கள் போடும் கணக்கா அல்லது அந்தப் பெயரில் நடக்கும் அரசியல் விளையாட்டா?

பிக் பாஸ்  வீட்டில் நடந்தது என்ன? - நாள் 91

அட்டகாசமான அவுட்ஃபிட்டில் நுழைந்த விசே, வீட்டிற்குள் நுழைந்தவுடன் தந்த முதல் டாஸ்க். ‘இவருக்குப் பதிலாக இவர் இருந்திருக்கலாம்’ என்கிற வில்லங்கமான ஆட்டம். சக போட்டியாளர்களின் மீதுள்ள வெறுப்புகளும் விமர்சனங்களும் பாரபட்சங்களும் இதன் மூலம் வெளியே வரும்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

பவித்ராவிற்குப் பதிலாக சுனிதா இருந்திருந்தால் ரகளையாக இருக்கும்’ என்று இந்த டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார் தீபக். ஆமாம், தத்தக்கா, பித்தக்கா தமிழில் பேசினாலும் மனதிற்குப் பட்டதை நேரடியாக சொல்லி விடும் குணமுடையவர் சுனிதா. என்னவொன்று ‘கவித’ சொல்லும் கெட்ட பழக்கம் அவரிடம் உண்டு.  விஷாலுக்குப் பதிலாக ஜெப்ரி இருந்திருக்கலாம் என்று சொல்லி தன் புகைச்சலைக் காட்டினார் ஜாக்குலின். இன்னொரு தேர்வாக, பவித்ராவிற்குப் பதிலாக தர்ஷிகா இருந்திருக்கலாம் என்றது உண்மை. (காதல் படுத்திய பாடு!)

‘மஞ்சரிக்குப் பதிலாக ஆனந்தி இருந்திருக்கலாம்’ என்றார் அருண். பலராலும் டார்கெட் செய்யப்பட்ட பவித்ரா எழுந்தார். “முத்துவிற்குப் பதிலாக ரவீந்தர் வந்திருக்கலாம்” என்று சொன்னது மைண்ட் கேமிற்கு ஓகே. ஆனால் பிஸிக்கல் கேமிற்கு?!...  அடுத்த சான்ஸில், ஜாக்கிற்கு பதிலாக ஆனந்தி இருந்திருக்கலாம் என்று சொல்லி ஜாக்குலினுக்கு ஷாக் தந்தார் பவித்ரா. ‘அருணிற்குப் பதிலாக அன்ஷிதா இருந்திருக்கலாம்’ என்று சொல்லி ஆச்சரியமூட்டினார் மஞ்சரி. Known devil என்கிற காரணமா?

ரயான், சௌந்தர்யா
ரயான், சௌந்தர்யா

இந்தி கற்கச் சென்று அதுவும் தெரியாமல், தமிழும் தெரியாமல் தடுமாறும் விஷால், ஜாக்கிற்குப் பதிலாக அன்ஷிதா இருந்திருக்கலாம் என்று சொல்லி தன் சார்பை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். (ரயானின் மொழியில் ‘பச்சையா தெரியுது’). அடுத்து எழுந்தாரய்யா முத்து! ‘சவுந்தர்யாவிற்குப் பதிலாக சாச்சனா இருந்திருக்கலாம்’ என்று சொல்வதின் மூலம் தன் பாசத்தை வெளிப்படுத்தினார். முத்துவின் இன்னொரு சாய்ஸ்: பவித்ராவிற்குப் பதிலாக ஜெப்ரி இருந்திருக்கலாம். 

மற்றவர்களின் விமர்சனங்களுக்குத் தலையாட்டும் பவித்ரா

செய்தி அறையிலும் களத்திலும் நின்று செய்தியாளர்கள் பேசிக் கொள்ளும் போது ‘சுரேஷ்.. இப்ப அங்க நிலவரம் எப்படி இருக்கு?” என்று நிலையத்தில் இருந்து கேட்க, களத்தில் நிற்கும் செய்தியாளர் தலையாட்டுவார். அதைப் போல யார் தன்னைப் பற்றிச் சொன்னாலும் ‘நிலவரம் இப்ப கலவரமாத்தான் இருக்கு’ என்பது போலவே பவித்ரா தலையாட்டுவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவற்றை ஒப்புக் கொள்கிறாரா அல்லது சுயபரிசீலனைக்காக பயன்படுத்திக் கொள்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம். 

ஜாக்குலின், மஞ்சரி
ஜாக்குலின், மஞ்சரி

விஷாலை அனுப்பி ஜெப்ரியை வைத்திருக்கலாம் என்பது ரயானின் கருத்து. கூடுதல் கருத்தாக அருணுக்குப் பதிலாக ரவீந்தர் இருந்திருக்கலாம் என்றார். ஆட்டத்தின் நிறமே வேறு மாதிரியாக இருந்திருக்குமாம். கடைசியில் வந்த சவுந்தர்யா “முத்துவிற்குப் பதிலாக ஆனந்தி இருந்திருக்கலாம்’ என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். கூடுதல் சான்ஸில் விஷாலை அனுப்பிவிட்டு ஜெப்ரி இருந்திருக்கலாம் என்றார் சவுண்டு.

எல்லோரும் சொல்லி முடித்தாலும் கூட ‘இன்னமும் இருக்கா கருத்து?’ என்று விசே கேட்டதால் எழுந்த ரயான், முத்துவை வெளியே அனுப்பிவிட்டு ஆனந்திக்கு ‘வெல்கம்’ சொன்னார். பின்னால் வந்த அருண், ரயானை அனுப்பிவிட்டு ஜெப்ரி இருந்திருக்கலாம் என்றார். அடுத்த சான்ஸில் முத்துவிற்குப் பதிலாக ரவீந்தர் இருந்திருக்கலாம் என்று பவித்ரா சொன்னதற்கு ‘ரிப்பீட்’ சொன்னார். 

“ஓகே.. இதுல இருந்து என்ன தெரியுது?” என்று விசே கேட்டவுடன், முதன் பென்ச் மாணவன் போல் முத்துக்குமரன் எழுந்து வழக்கமான பாணியில் வியாக்கியானம் சொல்ல “அது இல்ல. உக்காருங்க” என்று அமர்த்திய விசே “உங்க கூட ஆடறவங்க உங்களைப் பத்தி என்ன நெனக்கறாங்கன்னு உங்களுக்கே தெரியணும். இன்னமும் இரண்டு வாரம்தான் இருக்கு” என்று டாஸ்க்கின் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

'பயம்னா என்ன தெரியுமா? முத்து செய்ததுதான்’

பிரேக் முடிந்து வந்த விசே ‘TTF டாஸ்க்ல யாருக்கு ரொம்ப பதட்டம், பரிதவிப்பு, பயம்லாம் இருந்தது?’ என்றொரு கேள்வியை முன்வைக்க, பெரும்பாலோனோரின் பார்வை முத்துவை நோக்கித் திரும்பியது. அதுவரை தன்னம்பிக்கையாக இருந்த முத்து, ரயானின் வேகத்திற்குப் பிறகு ஜெர்க் ஆகி  ஸ்ட்ராட்டஜி என்கிற பெயரில் என்னெ்னமோ செய்து  தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டது உண்மை. இதை ஒப்புக்கொண்ட முத்து “ஆனால் எந்தவொரு இடத்திலும் நேர்மையை மீறக்கூடாதுன்னு இருந்தேன்” என்றார். 

பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன்
முத்துக்குமரன்

இது தொடர்பாக முத்து பற்றி சவுந்தர்யா சொன்ன விளக்கம் படு ஷார்ப்பாக இருந்தது. பேசியது சவுண்டுதானா என்று ஆச்சரியப்படுமளவிற்கு அத்தனை துல்லியமான, சரியான அபிப்ராயம். தன்னையே சொல்லிக் கொண்டார் மஞ்சரி. ‘மொட்டை அடிக்க கூட தயாரா இருக்கேன். டாஸ்க் கொடுங்கடா” என்று பவித்ரா பரிதவித்ததை அருண் விளக்கிய போது பவித்ராவே சிரித்தார். 

“இந்த டாஸ்க்கும் உங்களைப் பத்தி உங்களுக்கே புரியட்டும்தான்” என்ற விசே “அடுத்தபடியாக எவிக்ஷனும் இருக்கு. TTF வின்னர் யாருன்ற விடையும் இருக்கு. எது வேணும்?” என்று கேட்க மக்கள் கோரஸாக விடையை அறிய ஆவலாக இருந்தார்கள். “முதல்ல நல்ல விஷயத்தை காதால கேட்போம்” என்று சொல்லி சிரிப்பு மூட்டினார் சவுந்தர்யா. 

பிரேக்கில் முத்துவைப் பற்றி சவுண்டிடம் பேசிக் கொண்டிருந்தார் ரயான். “எப்பவுமே அவன்தான் மத்தவங்களைப் பற்றி லெங்க்த்தா பேசுவான். அதனாலதான் அவனை எக்ஸ்போஸ் பண்ணேன். வலிக்காம ஊசி போட்டு விட்டுடுவான். வார்த்தைகள் அத்தனை கவனமா இருக்கும்” என்கிற மாதிரி ரயான் சொல்ல “எப்பவுமே அவன் சொல்றதுதான் மத்தவங்க காதுல கேக்குது” என்று ரயானை ஆமோதித்தார் சவுண்டு. 

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய்சேதுபதி

ஹோஸ்ட் என்பவர் கட்டக் கடேசியில் ஃபைனலுக்கு முன்பாக நுழைவதுதான் பிக் பாஸ் மரபு. ஆனால் TTF தருவதற்காக உள்ளே விசிட் தந்து ஆச்சரியப்படுத்தினார் விசே. அவரை நேரில் பார்த்ததும் இனிய மகிழ்ச்சியில் போட்டியாளர்கள் மூழ்கினார்கள். ‘வெல்கம் ஹோம். உங்களை வீட்டிற்குள் பார்ப்பதில் மகிழ்ச்சி’ என்று பிக் பாஸ் வரவேற்க “உங்களையும் ஒருநாள் வீட்டிற்குள் பார்ப்பேன்னு நம்பறேன்” என்று பதிலுக்கு கலாய்த்தார் விசே. 

சவுந்தர்யா, முத்துக்குமரன், அருண்
சவுந்தர்யா, முத்துக்குமரன், அருண்

“உங்க மூலமாக நானும் நிறைய கத்துக்கிட்டேன். ஒரு விஷயத்திற்கு இத்தனை கோணங்கள் இருக்கான்னு தோணுச்சு. அந்த அளவிற்கு பேசினீங்க. இதெல்லாம் ஸ்கிரிப்ட்டான்னு சிலர் கேட்கறாங்க. அந்த அளவிற்கு ஒரிஜினலா இருக்கு. எங்க வீட்டம்மா கூட பிக் பாஸ் ஃபேன்தான். இதுல பார்க்கற விஷயங்கள் தன்னிச்சையா நம்மோட ஆழ்மனசுல பதியுது. உங்களுக்கு பிக் பாஸ் என்ன புரிதலைத் தந்தது. வரும் போது என்னனெ்ன பொய்லாம் சொன்னீங்க.. எண்டர்டெயின் பண்ணுவோம். நான் நானா இருப்பேன்.. அதையெல்லாம் விட்டு்ட்டு இந்த அனுபவத்தை பகிர்ந்துக்கங்க” என்றார் விசே. வீட்டிற்குள் பேசும் போது அவருடைய குரல் மிருதுவாக மாறியிருந்தது.

 முதலில் எழுந்த தீபக் “என்னைப் பத்தி ஓரளவிற்கு நானே புரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்துல டாஸ்க்லாம் பண்ணனுமான்னு தோணுச்சு. அதுக்கப்புறம் இதுக்குத்தானே இங்க வந்திருக்கோம்.. இதானே இங்க வேலைன்னு மாறினேன். எங்க வீட்ல வந்து சொன்னதுல டோட்டலா மாறிட்டேன்” என்ற தீபக்கிடம் “கேப்டன் ஆனதுல இருந்து உங்க ஆட்டம் டேக் ஆஃப் ஆயிடுச்சு” என்றார் விசே. 

“நாமதான் சரி, இன்னொருத்தர் தப்புன்னு வழக்கமா தோணும். ஆனா இங்க வந்த பிறகுதான் ‘அந்தந்த நேரத்து நியாயங்கள்’ன்னு தோணுது. தள்ளி நின்று பார்க்கும் போதுதான் மனிதர்களை சரியா எடை போட முடியுது” என்றார் மஞ்சரி. அடுத்து எழுந்த பவித்ரா ‘கூட்டம்னா பயம். இங்க வந்து மனிதர்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்றார். 

பிக் பாஸ் என்பது படிக்கட்டல்ல, பட்டறை - ரைமிங்கில் பின்னிய முத்து 


ஜாக் பப்ஸ் வாங்கித் தந்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட விஷால், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது பட்ட அடி எப்பவும் ஞாபகம் இருக்கும் என்ற பிக் பாஸ் அனுபவத்தை ஒப்பிட்டது சிறப்பு. “இது படிக்கட்டுன்னு நெனச்சேன். ஆனா பட்டறை” என்று அருமையாக ஆரம்பித்தார் முத்து. “நிறைய விமர்சனங்கள் வரும். ஜெயிச்சுக் காட்டணும்னு தோணும். ‘எப்படியாவது வெற்றி’ என்பதை விடவும் ‘எப்படி வெற்றி’ன்றது முக்கியம்ன்னு தோணுச்சு’ என்ற முத்து ‘என் சரிக்குள்ள ஒரு தப்பு இருக்குன்றதை புரிஞ்சுக்கிட்டேன்’ என்று சொன்னது திருவாசகம். 

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

“உங்களுக்கு என்ன வயசாகுது முத்து?” என்று கேட்ட விசே ‘நல்லாப் பேசினீங்க.. ராணவ்விற்கு ‘கத்துக்கிட்டே உழைக்கணும்ன்னு சொன்னீங்கள்ல.. சிறப்பு. எனக்கு சினிமா கத்துக்குடுத்தவங்கள்ல சிலர் அப்படியே இருக்காங்க. கத்து முடிச்சிட்டோம்ன்னு நெனக்கவே கூடாது. அது சேமிப்பை கரைக்கிற மாதிரி. தொடர்ந்து சேமிக்கணும்” என்று முத்துவின் பேச்சை சிலாகித்துப் பேசினார் விசே. 

“உங்க மேல செம கோபத்துல இருக்கேன் ரயான். வருத்தமாவும் இருக்கு” என்று டிராமாவாக ஆரம்பித்தார் விசே. “என்னாச்சு சார்” என்று ரயான் பதட்டப்பட “இத்தனை நாள் எங்கே ஒளிஞ்சிருந்தீங்க?” என்று கேட்க “அய்யோ.. சார்.. அது விஷயமா என் மேலயே கோபம் இருக்கு. தீபக்கோட டைரக்டர் பிரெண்டு சொன்னது எனக்கு பாதிப்பை ஏற்படுத்திச்சு. பிக் பாஸ் ஒரு நாள் என்பது ஒரு திரைப்படம் மாதிரி. மறுநாளே ரிலீஸ் ஆயிடும். உங்க பெஸ்டை அந்த ஒரு நாள்ல கொடுங்கன்னு சொன்னது உத்வேகமா இருந்தது, ஓட ஆரம்பிச்சிட்டேன்” என்றார் ரயான். வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி இருக்கிறது என்பது புரியும் தருணம். 

விஷால்
விஷால்

“உங்களை ஸ்டேஜ்ல பார்க்கும் போது பயமா இருக்கும். ஆனா நீங்க திட்டலை. நாங்க செய்யற தப்புக்கு தீர்வு சொல்றீங்க. யோசிக்க வைக்கறீங்க” என்று ஐஸ் வைத்தார் ஜாக்குலின். “உங்களை ஏன் திட்டப் போறேன். உங்க எல்லோர் கிட்டயும் ஒரு ஏக்கம் இருக்கு. உயரத்தை அடையணும்ன்னு. வெளில கூட சொல்வாங்க. ‘வெச்சு செய்ங்கன்னு’ அதைச் செய்யறது என் வேலையில்லை. ‘நீங்க யாரு’ன்னு கேள்வி கேட்க வைக்கறதுதான் என் வேலை. யாரையும் நான் காயப்படுத்த மாட்டேன். அதுக்கு அவசியமும் இங்க நேரலை” என்று நேரில் ‘இதமாக’ பேசினார் விசே. (அப்ப வாரா வாரம் வீட்டுக்குள்ளயே பேசலாம்!). 

TTF வின்னர் ரயான் - அதிகாரபூர்வ அறிவிப்பு

“ஓகே.. வந்த வேலையைப் பார்ப்போமா?” என்ற விசே TTF வின்னர் யார் என்பதை பெரிய சஸ்பென்ஸ் இல்லாமல் அறிவித்தார். அது ரயான். (அப்ப டிவிஸ்ட் இருக்குன்னு பிக் பாஸ் சொன்னது?!) “நான் கடைசி போட்டியாளரா வந்தேன். இப்ப முதல்ல ஃபைனல் போறேன்” என்று பெருமிதம் அடைந்த ரயானை கட்டியணைத்து வாழ்த்தி விடைபெற்றார் விசே. “உங்க அக்காவிற்கு தாங்க்ஸ் சொல்லுடா” என்று ஜாக் சொன்னது உண்மை. அக்கா தந்து விட்டுச் சென்ற கண்டிப்பான மருந்துதான் ரயானிடம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது போல.

பவித்ரா, ரயான்
பவித்ரா, ரயான்

மேடைக்குத் திரும்பிய விசே. “ஆரம்பத்துல வர்றப்ப அது செட்டா தெரிஞ்சது. இப்ப வீடா உணர முடியுது. அந்த கதகதப்பை ஃபீல் பண்ண முடியுது. அப்படி செட்டை வீடா மாத்தி வெச்சிருக்கீங்க” என்று போட்டியாளர்களை பாராட்டினார். “நேத்து நீங்க அடிச்ச அடில மனசு பாரமா இருந்தது சார். நேர்ல பார்த்த பிறகுதான் லேசா இருக்கு” என்று ஃபீல் செய்தார் முத்து. 

“ஓகே. எவிக்ஷன் பக்கம் போகலாம். யாரு வெளியே வந்தாலும் அது வெற்றிதான். டிராஃபியை விடவும் உங்களை அறியறதுதான் முக்கியம்” என்று விசே சொன்னது யதார்த்தமான உண்மை. தன்னையறிதல்தான் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி, கடைசியில் அடைய வேண்டிய அறுவடை. வம்பு பேசி வெறும் பதர்களை அள்ளிச் செல்வது அறிவீனம். 

“என்னது….மஞ்சரி எவிக்ஷனா?”

எவிக்ஷன் கார்டை விசே எடுத்து நீட்ட பலருக்கும் அதிர்ச்சி. என்னது மஞ்சரியா? தன்னை மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டாலும் மஞ்சரிக்கும் அந்த ஏமாற்றம் இருந்ததை உணர முடிந்தது. அனைவரிடமும் விடைபெற்ற மஞ்சரி “உன் கிட்ட அழ வேணாம்ன்னு இருக்கேன். அழ வெச்சிடாத” என்று நண்பன் முத்துவிடம் கேட்டுக் கொண்டார். விடைபெறும் போது “என் மேல விமர்சனங்கள் வந்தது. ஆனா அவற்றை தவறுன்னு நிரூபிக்க  நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாளடைவில் அது உங்களுக்கே புரிஞ்சிருக்கலாம். யாரையும் காயப்படுத்தியிருந்தா.. அது இந்த கேமோட ஃபார்மட்” என்று பேசினார் மஞ்சரி. 

மஞ்சரி
மஞ்சரி

“பொதுவா உறவுகளை சேர்த்துக்காத ஆள் நான். ஆனா விதிவிலக்கா இருக்கற ஆள் மஞ்சரி. இந்த வீட்டில அவங்க மத்தவங்க கூட பேசும் போது பொறாமையா இருக்கும். இந்த ரகசியத்தை இப்ப சொல்றேன். எனக்கு எப்பவுமே ஒரு பெஸ்ட் அக்காவா மஞ்சரி இருப்பாங்க” என்று நட்பைக் கொண்டாடி நெகிழ்ந்தார் முத்து. “மத்தவங்க என்னைப் போட்டியாளரா பார்த்தாங்க. அவ மட்டும்தான் அப்படி பார்க்கலை” என்று சொல்லி கண்கலங்கினார் ஜாக். 

“பிக் பாஸ். என் பையனுக்காக.. ஒரு நினைவாக இந்த டிராஃபியை உடைக்காம எடுத்துட்டுப் போகட்டுமா.. ப்ளீஸ்” என்று மஞ்சரி கண்கலங்கி வேண்டுகோள் வைக்க “இதுவரைக்கும் சொல் பேச்சு கேட்ட மஞ்சரியைத்தான் எனக்கு பிடிக்கும்” என்று நாசூக்காக அதை மறுத்த பிக் பாஸ் “உடையப் போவது டிராஃபியின் வடிவம் மட்டும்தான். நீங்கள் அல்ல. இந்த வீட்டின் கடினமான போட்டியாளர்களில் நீங்கள் ஒருவர் என்பதில் எனக்குப் பெருமை” என்று சொன்னதும் நெகிழ்ந்து போனார் மஞ்சரி.’செவ்வனே செய்தீர். செம்மையான வாழ்வு வெளியில் காத்திருக்கிறது’ என்று அழகுத் தமிழில் பாராட்டியது சிறப்பு.

“குறை வைக்காம விளையாடினேன்” - பெருமிதப்பட்ட மஞ்சரி

மேடையில் மஞ்சரியை வரவேற்ற விசே “உங்க கிட்ட சொல்ல எனக்கு எதுவுமே இல்லை. அத்தனை சிறப்பா விளையாடினீங்க” என்று பாராட்டினார். “இன்னமும் சரியா விளையாடியிருக்கலாமோன்னு எனக்குத் தோணலை. எந்தக் குறையும் நான் வைக்கலை” என்று தன்னம்பிக்கையுடன் பேசினார் மஞ்சரி. “சில சமயம் உங்க கிட்ட ஆர்க்யூ பண்ணியிருக்கேன். அது டிஃபென்சிவ் மோட் இல்ல. நீங்க சுட்டிக் காட்டிய தப்பை உள்ள பிராசஸ் பண்ணிட்டே இருப்பேன்” என்று மஞ்சரி சொல்ல “டிபென்சிவ்வா இருக்கறதுதான் நல்லதுதான்” என்றார் விசே.. 

தீபக், ஜாக்குலின்
தீபக், ஜாக்குலின்

‘ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது’ என்ற மஞ்சரி ‘கூழாங்கற்கள் எந்த ஆபரணங்களைச் சேர்வதற்காகவும் காத்திருப்பதில்லை’ என்று துவங்கும் அழகான கவிதையை மனப்பாடமாகச் சொன்னார். ஆனால் அதை எழுதியவரின் பெயரை மறந்து விட்டார். (அந்தக் கவிதையை எழுதியவர்: நேசமித்ரன்). மஞ்சரியின் வீடியோ சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது. “கடைசி வசனம் மாஸா இருந்தது” என்று விசே பாராட்ட “ஆமாம் சார். கத்தி கத்தி வந்த இடம்தான் இது. Calm and composed ஆ இருக்கறது ஒரு privilege. பலருக்கு அது கிடைக்காது. கத்தினாதான் கிடைக்கும்” என்று மஞ்சரி  சொன்னது அருமையான கருத்து. 

வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களுடன் பேசினார் மஞ்சரி. அருண் தனது அன்பைக் காட்ட, விஷால் தன் மரியாதையைக் காட்ட “முத்துவோட தமிழே புரியாது. இவங்க வந்த பிறகு இன்னமும் மோசம். ஆனா முத்துவிற்கு இவங்கதான் சரியான போட்டி. ஆனா அவங்க போறது ஓகேதான். ரயான் இருக்கான்” என்று சொல்லி சிரிக்க வைத்தார் சவுந்தர்யா. “ஜெயிச்சுட்டு வாடா முத்துக்குமரா” என்று மஞ்சரி சொன்னது ஒரு உணர்ச்சிகரமான மோமெண்ட். “இங்க எல்லோரும் தனக்காக பேசும் போது சமூகத்திற்காகவும் சேர்த்து பேசிய ஒரே நபர் மஞ்சரி” என்று பாராட்டிய முத்து பிறகு “என்னை விடவும் அறிவில், சிந்தனையில் மஞ்சரி உயர்ந்தவர்” என்று பாராட்டினார். 

BBTAMIL 8: DAY 91

மஞ்சரியை வழியனுப்பிய விசே “ஏன் மக்களே. இப்படி கோக்குமாக்கு பண்றீங்க?’ என்று மஞ்சரியின் எவிக்ஷனுக்காக கேட்டு விட்டு விடைபெற்றார். கார்டன் ஏரியாவின் தனிமையில் ஆக்ரோஷமாக கத்தி இந்தப் பிரிவை கடக்க முயன்றார் முத்து. அழுது கொண்டிருந்த ஜாக்கிடம் “இனிமே டாஸ்க் கிடையாது. ஆடி முடிச்சிட்டோம். இனிமே இனிமையான நினைவுகளை சேமிப்போம்” என்று ஆறுதல் சொன்னார் அருண். 

இனிமேல் என்ன? பழைய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்த வீட்டின் குதூகலத்தை அதிகப்படுத்துவார்கள். பழைய வம்புகள் மீண்டும் கிளறப்படலாம். போட்டியாளர்களின் எண்ணிக்கை இன்னமும் சுருங்கும். 

மேடையில் நிற்கப் போகும் அந்த இருவர் யார்?

BB Tamil 8: ``அறம் அறம்னு அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலயும் அறம் இல்ல"- முத்துவை சாடிய சிவகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்... மேலும் பார்க்க

Siragadikka aasai : மனோஜைக் காப்பாற்றிய முத்து... நன்றி உணர்வு இல்லாத ரோகிணி

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோஜ், ரோகிணி ஷோரூமில் இருக்கும் போது, அங்கு ரவி, ஸ்ருதி வருகின்றனர். முத்துவும் மீனாவும் வர சொன்னதாக சொல்கின்றனர்.சற்று நேரத்தில் முத்து, மீனா அண்ணாமலை, விஜய... மேலும் பார்க்க

BB Tamil 8: பிக் பாஸில் மீண்டும் என்ட்ரி ஆன அர்ணவ்; எதிர்க்கும் போட்டியாளர்கள்; என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 92: PR Team சர்ச்சை; கண்ணீர் விட்ட சவுந்தர்யா; முத்து - ரயான் - ஆட்டம் ஆரம்பம்

கிளைமாக்ஸ் நெருங்குவதால் பல டிவிஸ்ட்டுகளைத் தந்து சுவாரசியத்தைக் கூட்ட பிக் பாஸ் டீம் கருதுகிறது போல. அதில் ஒன்றுதான் ‘Wildcard Knockout’. முன்னாள் போட்டியாளர்கள் ‘விருந்தினர்களாக’ அல்லாமல் போட்டியாளர... மேலும் பார்க்க

BB Tamil 8: "நீ என்ன 'Triangle Love' பண்ணிட்டு இருந்தயா?" - விஷாலை ரோஸ்ட் செய்த சுனிதா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்ட... மேலும் பார்க்க

BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் சௌந்தர்யாவும் கடந்த சீசன் போட்டியாளர் விஷ்ணுவும் அதிகாரபூர்வமாக தங்களது காதலை உலகத்துக்குத் தெரிவித்திருக்கிறார்கள். சௌந்தர்யா தற்போது ஃபினாலேவை நோக்கி முன்னேறிக் கொண்டிரு... மேலும் பார்க்க